மலை மீது தாயார்... அடிவாரத்தில் பெருமாள்
ஜனவரி 26,2022,17:06  IST

மலை மீது பெருமாளும், கீழே தாயாரும் காட்சி தருவது திருப்பதியில். ஆனால் தாயார் மலை மேலும், பெருமாள் கீழேயும் இருக்கும் தலம் கோயம்புத்துார் மாவட்டம் காரமடை ரங்கநாதர் கோயில். இங்கு சதுர வடிவில் சிவலிங்கம் போல சுவாமி காட்சி தருகிறார்.
ஒரு சமயம் கருடாழ்வாருக்கு திருமாலின் திருமணக்கோலத்தை காண வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அதை தெரிவிக்கவே, சுவாமியும் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டியருளினார். அந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். இப்பகுதி காரை மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கு வசித்த ஒருவர் பசுக்களை மேய்த்து வந்தார். அதில் ஒரு பசு குறிப்பிட்ட காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது தினமும் பால் சொரிவதைக் கண்டார். அப்புதரை வெட்டிய போது ரத்தம் பீறிட்டது. அந்த இடத்தில் தான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியிருப்பதை அசரீரியாகத் தெரிவித்தார் சுவாமி. பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.
கருவறையில் மூலவர் சதுரபீட வடிவில் இருக்கிறார். இவரை ரங்கநாதர், வெங்கடேசப்பெருமாள் என அழைக்கின்றனர். பிரம்ம, கருட தீர்த்தங்கள் உள்ளன. வேணுகோபாலர், சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. மூலவரை பார்த்தபடி அனுமன் இருக்கிறார். இவரது சிலை பெரிய சதுரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு அருகிலுள்ள மலை மீது தாயார் சன்னதி உள்ளது. இந்த தாயாரை 'பெட்டத்தம்மன்' என அழைக்கின்றனர். மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் மலைக்கோயிலில் உள்ள தாயாரை கும்பத்தில் எழுந்தருளச் செய்து அடிவாரக் கோயிலுக்கு கொண்டு வருவார். அக்கும்பத்தை கருவறையில் வைத்து பூஜை நடத்துவர். மறுநாள் அதிகாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். ரங்கநாதருக்கு வலது புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனி சன்னதி கட்டப்பட்டது.
இங்கு பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக ராம பாணத்தால் ஆசியளிக்கின்றனர். இதற்குள் திருமாலின் ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவம் உள்ளன. மாசி மகத்தன்று பெருமாள் சுவாமி தேரில் எழுந்தருள்வார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவை கலந்த பிரசாதத்தை ஏந்தி, 'ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,' எனச்சொல்லி ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். இதனை 'கவாள சேவை' என்று பெயர். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் 'தண்ணீர் சேவை', கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்கும் 'பந்த சேவையை' பக்தர்கள் வேண்டுதலாகச் செய்வர்.

எப்படி செல்வது: கோவை - மேட்டுப்பாளையம் வழியில் 30 கி.மீ.,
விசேஷ நாள்: ராமானுஜ ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி , மாசி மக பிரம்மோற்ஸவம்
நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 04254 - 272 318
அருகிலுள்ள தலம்: இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் 15 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 04254 - 254 994

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X