கேரளாவிலுள்ள திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடாவில் ராமபிரானின் சகோதரனான பரதனுக்கு கோயில் உள்ளது. காட்டுக்குச் சென்ற ராமரை பதினான்கு வருடம் கழித்து சந்தித்த தம்பியான பரதனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இங்கு சுவாமியின் முகத்தில் காணலாம். இங்கு வழிபட்டால் சகோதர ஒற்றுமை பலப்படும்.
ஒருமுறை விஷ்ணு பக்தரான 'வாக்கை கைமள்' என்பவருக்கு மலபார் கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் சுவாமி சிலைகள் இருப்பதாக கனவு ஏற்பட்டது. அங்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு ஜொலித்தபடி நான்கு சிலைகள் கிடைத்தன. ராம சகோதரர்களான அச்சிலைகள் துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணரால் பூஜை செய்யப்பட்டவை. துவாரகை நகரம் கடலில் மூழ்கிய போது இச்சிலைகள் கடலில் அடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராமருக்கு திர்பிறையாறு,
பரதருக்கு இரிஞ்ஞாலக்குடா, சத்ருகனருக்கு மூளிக்குளம், லட்சுமணருக்கு பாயம்மல் ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன. 15 கி.மீ., சுற்றளவில் உள்ள இக்கோயில்களை 'ராமாயண மாதம்' என்னும் ஆடியில் தரிசித்தால் கோடி புண்ணியம் உண்டாகும்.
'கூடல் மாணிக்கப் பெருமாள்' என்றும், 'சங்கமேசன்' என்றும் இங்கு பரதனுக்கு பெயருண்டு. பல நுாற்றாண்டுக்கு முன் இங்கு திருப்பணி செய்த போது சுவாமியின் நெற்றியில் அபூர்வ ஒளி தோன்றியது. பார்ப்பதற்கு மாணிக்க கல்லின் ஒளி போல இருந்தது. காயங்குளம் மன்னரிடம் இருந்த மாணிக்கக் கல்லை இந்த ஒளியுடன் ஒப்பிட்ட போது இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்டனர். இதனடிப்படையில் சுவாமிக்கு மாணிக்கப்பெருமாள் என பெயர் ஏற்பட்டது.
சித்திரை மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில் தினமும் 17 யானைகளுடன் சுவாமி எழுந்தருளல் நடக்கும். நுாறு வாத்திய கலைஞர்கள் பங்கேற்பர். திருமணம் தடையின்றி நடக்கவும், ஐஸ்வர்யம் பெருகவும் சுவாமிக்கு 101 தாமரைப் பூக்களால் ஆன மாலை அணிவிக்கின்றனர். சுவாமிக்கு கத்தரிக்காய் நைவேத்யம் செய்தால் வயிற்று கோளாறு மறையும்.
எப்படி செல்வது:
* திருச்சூரில் இருந்து 23 கி.மீ.,
* சாலக்குடியில் இருந்து 19 கி.மீ.,
* கொடுங்கல்லுாரில் இருந்து 16 கி.மீ.
விசேஷ நாள்: சித்திரை பிரம்மோற்ஸவம், ஸ்ரீராம நவமி, ஆடி நாலம்பல தரிசனம்
நேரம்: நள்ளிரவு 3:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0480 -282 6631
அருகிலுள்ள தலம் : திர்பிறையாறு ராமர், பாயம்மல் லட்சுமணர், மூளிக்குளம் சத்ருக்கனர் கோயில்கள்