அடக்கம் அமரருள் உய்க்கும்
ஜனவரி 26,2022,17:09  IST

கவிஞர் கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் நுாலில் இருந்து ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.

ஒரு சபைக்கு நான் போயிருந்தேன். பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்த அரைகுறைப் படிப்பாளி ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.
அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருத்தவில்லை. ஒவ்வொரு வரியையும் முடிக்கும் போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன். “தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன். சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றி விடுவார்கள். என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள். நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்க மாட்டேன். சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.
முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை. ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது. தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி. தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;
தான்சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காகத் தினமும் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கும் தலைவர்கள்;
- இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக்குறுகிப் போய் விடுகின்றார்கள்.
'எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்தி தான் காரணம்' என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை. 'மற்றவர்களுக்கு என்ன தெரியும்' என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை. ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.
அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது.
'எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்' என்றான் வள்ளுவன். 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்று பேசுகிறவர்கள் உண்டு. பெரியோர் வற்புறுத்தும் பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!
என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவனின் காலைத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன்.
“அந்தக் கால்கள் தேசத்துக்காக சத்தியாக்கிரகம் செய்யப்போன கால்கள். சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள் என்னுடைய கால்களுக்கு அந்தப்பாக்கியம் இல்லாததால், கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”
சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப் புகழ்வார்கள். எனக்குச் சர்வாங்கமும் ஒடுங்கிவிடும். 'நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்து விட்டோம்?' என்ற எண்ணமே தோன்றும். 'இப்படிப் புகழ்கிறார்களே' என்ற பயம் தோன்றும்.
ஆண்டவன், என் தலையில் ஆணவத்தை உட்கார வைத்து என்னை அவமானப்படுத்தியதில்லை!
அடக்கத்தில் இருக்கும் சுகம், ஆணவத்தில் இல்லை!
ஆணவத்தின் வெற்றி ஆரவாரங்களையும், அவற்றின் வீழ்ச்சியையும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் படியுங்கள்.
'கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்வதர்மங்களில் அடக்கமும் ஒன்று' என்பதையும் அறியுங்கள்.
குருட்டுத்தனமாக ஏதேனும் வெற்றியோ பதவியோ கிடைத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு, ஞானிகளையும் பெரியவர்களையும் அவமதிக்காதீர்கள்.
அடங்கி வாழ்ந்தால் ஆயுள் காலம் முழுவதும் ஓங்கி வாழலாம் என்பதே உண்மை.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X