படைப்பின் ரகசியம்
ஜனவரி 26,2022,17:17  IST

அகத்திய முனிவர் தம் வாத செளமியம் 1200 என்ற நுாலில் பாடல்கள் 121, 122ல் சிவம் என்னும் நடராஜர், சக்தி என்னும் உமாதேவியார், சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், திருமால், பிரமன் ஆகிய ஐந்தொழில் தெய்வங்களும் படைக்கப்பெற்ற செய்திகளை விவரித்துள்ளார்.
ஜோதி சொரூபமான பரப்பிரம்மத்தில் இருந்து சிவம் என்னும் நடராஜரின் உருவம் உண்டாயிற்று. அடுத்து சக்தியின் உருவம் (உமாதேவியார்) உண்டாயிற்று. சக்தியிலிருந்து சதாசிவனும், சதாசிவனிலிருந்து மகேஸ்வரனும் உதித்தனர்.
பின்னர் மகேஸ்வரனிலிருந்து ருத்திரன் தோன்றினார். ருத்திரனிலிருந்து திருமால், திருமாலிலிருந்து பிரம்மன் தோன்றினர். முதன்மையானவரான பரமசிவன், ஆகாயத்தின் அம்சமான சதாசிவனுக்கு அருளல் தொழிலையும், காற்றின் அம்சமான மகேஸ்வரனுக்கு மறைத்தல் தொழிலையும், தீயின் அம்சமான ருத்திரனுக்கு அழித்தல் தொழிலையும், நீரின் அம்சமான திருமாலுக்குக் காத்தல் தொழிலையும், மண்ணின் அம்சமான பிரம்மனுக்குப் படைத்தல் தொழிலையும் பகிர்ந்தளித்தார்.
கேளப்பா பராபரமாய் நின்ற சோதி
கிருபையுடன் சிவம்படைக்க நினைத்தபோது
மாளப்பா வல்லபரம் தன்னி லேதான்
வளமான சிவமதுதான் உண்டாச் சப்பா
மேலப்பா சிவமதிலே சக்தி உண்டாய்
விளங்கி நின்ற சக்தியிலே மைந்தா கேளு
சூளப்பா சதாசிவன்தான் துலங்கி நின்ற
சொற்பெரிய சதாசிவத்தில் மகேசுரன்தானே.

தானான மகேஸ்வரனில் உருத்திரன்தான்
சங்கையுள்ள உருத்திரனில் திருமால் தோன்றி
கோனான திருமாலில் அயனார் தோன்றி
குவிந்தெழுந்த எழுவரும்தான் கூர்மையாக
வானான பராபரத்தை அறிய மாட்டார்
மகத்தான பரந்தானே பராபர மாகும்
தேனான பரமசிவம் அதிகாரத்தைத்
தீர்க்கமுடன் அனுக்கிரகம் செய்தார் பாரே
ஏழு தெய்வங்களும் தோன்றிய பிறகு உலகங்கள் தோன்றியதைப் பற்றி 124, 125 பாடல்களில் விளக்கியுள்ளார்.
பரமசிவன் வானத்தை உண்டாக்கக் கருதி திருமாலைக் கண்ணுற்றார். அடுத்து சதாசிவனைப் பார்த்தார். அவர் பேரண்டங்களைப் படைத்து நின்றார். பின்னர் பரமசிவன் மகேஸ்வரனைப் பார்க்க அவர் இடியையும் வாயுவையும் படைத்து நின்றார். அடுத்து ருத்திரனைப் பார்க்கும் போது, அவர் மின்னலையும் அக்கினியையும் படைத்தார். தொடர்ந்து திருமாலைப் பார்க்க, அவர் அகண்ட மேகத்தைப் படைத்து நின்றார். பின்னர் பிரம்மனை நோக்கியபோது அவர் பூமியைப் படைத்தார். இறுதியாக பரமசிவன், சக்தியைக் கண்ணால் நோக்க அவர் சூரியனைப் படைத்து நின்றார். இவ்வாறு ஏழு பேர்களுள் பரமசிவன் முதன்மையாய் விளங்க, ஐந்தொழில் தெய்வங்களின் கடமை அமைந்தது.
காணவே பரமசிவன் வானுண்டாக்கக்
கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேவி
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும்போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மகேஸ்வரனைப் பார்க்க வேதான்
உருமியிடி வாயுதனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்க
துலங்கும் மின்னல் அக்கினியும் படைத்தார் பாரே.
பாரான திருமாலைப் பார்க்கும்போது
பதிவான அகண்ட மேகம் படைத்து நின்றார்
ஆரான பிரம்மனையும் நோக்கும் போது
அளவற்ற பூமிதனைப் படைத்து நின்றார்
நேரான சக்திதனைக் கண்ணால் மேவி
நிஜமான சூரியனைப் படைத்து நின்றார்.
பேரான சிவமதுவும் பதியாய் நின்ற
பெருமையுடன் எழுவர் அதிகாரம் காணே.
மனித இனத்தின் படைப்பை பற்றி 127,128,129 பாடல்களில் விளக்கியுள்ளார்.
உலகைப் படைத்த பின்னர் பரமசிவன் மனிதர்களைப் படைக்க நினைத்து சக்தியை அழைத்து உபதேசித்தார். சதாசிவத்துக்கு சக்தி உபதேசித்தார். சதாசிவம் அதை மகேஸ்வரருக்குக் கொடுத்தார். மகேஸ்வரன் அதை ருத்திரனுக்கும், ருத்திரன் அதைத் திருமாலுக்கும் கொடுத்தனர். திருமால் அதை பிரம்மனுக்குக் கொடுக்க, அவர் தவம் செய்து மனிதர்களைப் படைத்தார்.
பிரம்மன் (நிலம் - தொப்புளுக்குக் கீழே - ந), திருமால் (நீர் - தொப்புளுக்கு மேலே - ம), ருத்திரன் (நெருப்பு - இதயம் - சி), மகேஸ்வரன் (காற்று - தொண்டை - வ), சதாசிவன் (ஆகாயம் - இரு புருவங்களின் நடு - ய) ஆகிய இடங்களில் அமைந்திட, நடராஜரும், உமையவளும் பிரம்மரந்திரத்தில் நின்றிட, கோடிக்கணக்கான உயிர்கள் தோன்றி இளமை, மூப்பு, இறப்பு இன்றி, ஒரு கோடி காலம் உலகில் வாழ்ந்தனர். இவ்வாறு மனித இனம் குறிக்கோளின்றி இருப்பதைக் கண்ட பரமசிவன், உமாதேவியை நோக்கி மனித இனம் நம்மை வணங்குமாறு அருள் செய் என்றார்.

சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்
kamalakkannan1932@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X