அஷ்ட லட்சுமிகளில் ஒருவரின் அருள் மட்டும் கிடைக்கவில்லை என்றால் மற்ற லட்சுமியரின் அருளும் நமக்குக் கிடைக்காமல் போகும். மற்ற லட்சுமிகள் நம்மை விட்டு விலகினாலும் ஒரு லட்சுமி மட்டும் நம்மை விட்டு விலகவே கூடாது. அவள் யார் தெரியுமா. அவள் தான் தைரியலட்சுமி. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருக்கும் இவள் தைரியம் கொடுக்க நமக்காக காத்திருக்கிறாள். திருமகளாகிய இவளை பூஜிக்கும் விதத்தில் சூரிய பகவான் ஆண்டுக்கு ஆறு நாட்கள் மூலஸ்தானத்தில் கதிர்களைப் பரப்புகிறார்.
பிரளயகால வெள்ளத்தில் கடல் பொங்கி பூமி அழியத் தொடங்கியது. ஆனால், பூமியில் ஒரே ஒரு பகுதியை மட்டும், அன்னை மகாலட்சுமி வலது கையால் உயர்த்தி அழிவில் இருந்து காப்பாற்றினாள். அந்த இடம் 'கரவீர்' எனப்பட்டது. 'கர' என்பதற்கு 'கை' என்றும், 'வீர்' என்றால் 'வீரம்' என்றும் பொருள். லட்சுமி வீரச்செயல் புரிந்ததால் 'வீரலட்சுமி' 'தைரிய லட்சுமி' என அழைக்கப்படுகிறாள். அஷ்ட லட்சுமிகளில் ஒருத்தியான வீரலட்சுமியை வழிபட்டால் மற்ற ஏழு லட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும். இத்தலத்தின் மகிமை அறிந்த அகத்தியர், காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்க வேண்டும் என சிவனிடம் கோரிக்கை வைக்க அவரும் அருள்புரிந்தார். முற்காலத்தில் 'குளபுரா' என்று அழைக்கப்பட்டது.கோலாசுரன் என்ற அரக்கனை சிங்க வாகனத்தில் எழுந்தருளி லட்சுமி வதம் செய்த பின், 'கோலாப்பூர்' என மாறியது.
சக்தி பீடங்களில் இத்தலம் 'கரவீர பீடம்' எனப்படுகிறது. மராட்டிய மன்னர்களின் பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில், மகாதுவாரம் எனப்படும் பிரதான மேற்கு வாசலில் அழகிய தீப ஸ்தம்பங்கள் காண்போரை கவரும் விதத்தில் உள்ளன. கருவறையில் ஆதிசேஷன் குடைபிடிக்க மகாலட்சுமி சதுர பீடத்தில் நின்றகோலத்தில் அமுதசுரபியை ஏந்தியபடி இருக்கிறாள்.
1300 ஆண்டுகள் பழமை மிக்க அன்னையின் சிற்பம் மிக அரிதான கரிய ரத்தினக் கல்லால் ஆனது. சூரியன் இங்கு வழிபடும் விதமாக ஜன.31, நவ. 9ல் மகாலட்மியின் திருவடியிலும், பிப். 1, நவ. 10ல் மார்பிலும், பிப்.2, நவ.11ல் திருமேனி முழுவதும் சூரியக்கதிர் படர்கிறது. இங்கு வழிபடுவோருக்கு செல்வம் பெருகும்.
எப்படி செல்வது
* சென்னையில் இருந்து 960 கி.மீ.,
* மும்பையில் இருந்து 370 கி.மீ.,
விசேஷ நாள்: அட்சய திரிதியை, நவராத்திரி, அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0231 - 254 1779
அருகிலுள்ள தலம்: 21 கி.மீ., ஜோதிபா மும்மூர்த்தி கோயில்
நேரம் : அதிகாலை 5:30 - இரவு 10:30 மணி
தொடர்புக்கு: 02328 -- 239 041