பறவைகள் என்ற சொல்லை கேட்டவுடனேயே நமது மனம் சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு அதன் அழகும், நிறமும் நமது மனதை கொள்ளை கொள்ளும். அப்படிப்பட்டதுதான் பார்ன் சுவாலோ என்னும் பறவை இனம். இது இனப்பெருக்கத்திற்காக அர்ஜென்டினாவில் இருந்து 8300 கி.மீ., பயணம் செய்து கலிபோர்னியா செல்கிறது.
பறவைகள் என்றாலே பறக்கத்தானே செய்யும். இதில் என்ன ஆச்சர்யம் உள்ளது என நீங்கள் நினைக்கலாம். இங்கு தான் நீங்கள் கழுகுப்பார்வையால் பார்க்க வேண்டிய இடம். இது பறந்து செல்லும் துாரத்தில் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது. கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும் என்ற சூழல். சாதாரணமாகவே காட்டில் இருக்கும் பறவைகளுக்கு உணவு கிடைக்காது. அப்படி இருக்கையில் இதற்கு எப்படி சாப்பாடு கிடைக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள். நாம் எப்படி பயணம் செய்யும்போது சாப்பாடு, தண்ணீர் என ரெடி செய்து கிளம்புவோமோ... அதுபோல் அது ஒரு சிறுகுச்சியை கவ்விக்கொள்கிறது. பசிக்கும்போது அதை கடலின்மீது போட்டு, அதன் மீது நின்று இரை தேடும்.
பார்த்தீர்களா... சிறு குச்சிதான் அதன் வாழ்க்கைக்கு ஆதாரம். ஆனால் நம்மில் சிலரோ இது கிடைத்தால் மகிழ்ச்சி. அது கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என காலத்தை வீணடிக்கிறோம். இதனால் யாருக்கு என்ன லாபம். உங்கள் வாழ்க்கைதான் வீணாகிறது. எனவே உங்களிடம் என்ன உள்ளதோ அதை வைத்து வாழ்க்கையை கொண்டாடுங்கள்.