நம் எல்லோரும் மகிழ்ச்சி, துன்பம் என்ற பாதைகளை கடந்து வந்திருப்போம். இதில் எது உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டால் அனைவரும் மகிழ்ச்சி என்றுதான் சொல்வோம். ஆனால் துன்பமும் ஒரு அனுபவம்தான் என்றால் பலரும் ஏற்பதில்லை. மகிழ்ச்சியான காலமே பொற்காலம் என நினைப்பதுதான் இதற்கு காரணம்.
மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ, அதே மாதிரி துன்பமும் ஒரு சுவை. இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
ஓட்டலில் மதிய உணவிற்காக தன் மகனுடன் காத்திருந்தாள் அம்மா. சுட சுட அப்பளம், பாயாசம் என வந்தது சாப்பாடு. முதலில் பாகற்காய் கூட்டை சாப்பிட ஆரம்பித்தாள் அம்மா. அதைப்பார்த்த மகன், ''ஏம்மா.. ஸ்வீட், காரம் என நிறைய இருக்கே.. ஏன் கசப்பானதை சாப்பிடுகிறீர்கள்'' எனக்கேட்டான்.
''டேய் கண்ணா.. உனக்கு இனிப்பு பிடிக்கும். அதனால் ஸ்வீட் சாப்பிடுகிறாய். எனக்கு கசப்பு பிடிக்கும் பாகற்காய் சாப்பிடுகிறேன்'' என்றாள் அம்மா.
இங்கேதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மனதிற்கு ஒன்று பிடித்துவிட்டால்போதும். அதன் சுவை எல்லாம் கண்ணுக்கு தெரியாது. வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயமும் இதுபோல்தான்.
இனிப்பு ஒரு சுவையென்றால், கசப்பும் ஒரு சுவை. மகிழ்ச்சி ஒரு சுவையென்றால், துன்பமும் ஒரு சுவை. இப்படி சுவைகளை சுவைத்து பாருங்கள். வாழ்க்கை என்னும் மலர் மென்மையாக விரிவதை பார்ப்பீர்கள்.