கேளுங்க சொல்கிறோம்
மே 09,2022,15:00  IST

என்.ராமச்சந்திரன், பெண்ணாடம்.
*மதுரையில் மீனாட்சியம்மனை முதலில் தரிசிப்பது ஏன்?
மலையத்துவஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தவள் மீனாட்சி. பாண்டிய நாட்டு இளவரசியான இவளுக்கு பட்டாபிஷேகம் நடத்தினார் மன்னர். திக்குவிஜயம் புறப்பட்ட அவள், கயிலாயத்தில் சிவபெருமானைக் கண்டாள். அவர் மீது காதல் கொண்டு திருமணம் புரிந்தாள். பாண்டிய நாட்டின் மகாராணியாக அரியாசனத்தில் அமர்ந்தாள். இதனடிப்படையில் மதுரையின் அரசியான மீனாட்சியை முதலில் தரிசிக்கும் வழக்கம் உருவானது.

அ.முருகன், திருத்தணி.
*வீட்டிலேயே அன்னதானம் செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். பிறருக்கு அன்னதானம் செய்த பின்னரே நாம் உணவு உண்ண வேண்டும்.

டி.லாவண்யா, மதுரை.
*படுக்கையில் அமர்ந்தபடி சாப்பிடலாமா?
சாப்பிடக் கூடாது. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்கிறது தமிழ் இலக்கியம். உணவுக்குரிய கவுரவத்தை அளிப்பது நம் கடமை. அதை மீறுவோருக்கு உணவு கிடைப்பது சிரமம்.

எம்.ராஜன், கோவை.
*கோயிலுக்குச் சென்றால் நிம்மதி கிடைக்குமா?
'உடம்பே கோயில்; மனமே சிவலிங்கம்' என்பார்கள். துாய்மையான சிந்தனையோடு வழிபடுவோருக்கு நிம்மதி கிடைக்கும்.

ரெ.மல்லிகா, திருநெல்வேலி.
*மஞ்சள் கயிறு இன்றி தங்கச்சங்கிலியில் தாலி அணியலாமா?
திருமணத்தின் போது 'மாங்கல்ய தந்துனானேன' என்ற மந்திரம் சொல்லும் போது மணமகளுக்கு தாலி கட்டப்படும். இதில் 'தந்து' என்பதற்கு 'நுால் கயிறு' என்பது பொருள். எனவே தங்கச்சங்கிலியுடன் மஞ்சள் கயிறும் சேர்ந்திருப்பதே சிறப்பு.

கா.கணபதி, குன்றக்குடி.
*சிவனின் முதல் அவதாரம் எது?
பிறப்பு, இறப்பு அற்றவர் சிவன். அதனால் பூமியில் அவர் அவதாரம் எடுக்கவில்லை.

பி.ரேவதி, பெங்களூரு.
*கன்னிகா தானம் என்றால் என்ன?
பெற்றோர்கள் தங்களின் மகளை தகுதியான ஆண்மகனுக்கு வாழ்க்கைத்துணையாக அளிப்பதே கன்னிகாதானம். மனிதர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும்.

அ.காசிராஜன், அம்பாசமுத்திரம்.
*மானசீக குரு என்பவர் யார்?
பல ஆசிரியர்களிடம் பாடம் பயின்றாலும், குறிப்பிட்ட ஒருவரின் ஒழுக்கம், உபதேசங்கள் மட்டும் நம் மனதை ஈர்க்கும். அந்த ஒருவரே மானசீக குரு ஆவார்.

பா.ஆறுமுகம், நாகர்கோவில்.
*தர்மம் செய்தால் கர்மம் தீருமா?
நிச்சயமாக தீரும். மற்றவர் மீது நீங்கள் இரக்கப்பட்டால் உங்கள் மீது கடவுளும் இரக்கம் கொள்வார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X