ஏ.ராகவி, டில்லி.
*ஆடம்பரமாக ஆடை உடுத்தி சிலர் கோயிலுக்கு செல்கிறார்களே...
பட்டு உடுத்தி, நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வதில் தவறில்லை. அம்பாளுக்கு பட்டு, ஆபரணங்களால் அலங்காரம் செய்கிறோமே! அவரவர் தகுதிக்கேற்ப உடுத்துவது தவறல்ல. நம் கலாசாரத்துக்கு விரோதமாகத்தான் உடுத்தக் கூடாது.
எம்.ஹேமா, சென்னை.
*அக்னி ஹோத்ரம் என்றால் என்ன? வீட்டில் செய்யலாமா?
தினமும் அந்தணர்கள் வீட்டில் செய்யும் வேள்வியே அக்னி ஹோத்ரம். வீட்டில் வேள்வி செய்ய விரும்புவோர் கணபதி ஹோமத்தை நடத்தலாம்.
என்.நரேந்திரன், நாகர்கோவில்.
*'சனிப்பிணம் தனியாகப் போகாதாமே'உண்மையா?
பயம் வேண்டாம். பிரேதத்துடன் ஒரு விறகுக்கட்டையை வைத்துச் சென்றால் போதுமானது.
எல்.விக்னேஷ், திருப்பூர்.
*கங்கை தீர்த்தம் வீட்டில் இருந்தால் என்ன செய்யலாம்?
மூடியிருக்கும் செம்பில் தீர்த்தம் இருந்தால் அதை தினமும் பூஜிக்கலாம். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செம்புகளில் தீர்த்தம் இருந்தால் அபிஷேகம் செய்ய கோயிலுக்கு கொடுங்கள்.
எஸ்.மாலா, திருநெல்வேலி.
*கோயிலில் குழந்தை சிறுநீர் கழித்தால் தோஷம் ஏற்படுமா?
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால் தோஷம் ஏற்படாது. அந்த இடத்தை துாய்மைப்படுத்தினால் போதும்.
எஸ்.லதா, விழுப்புரம்.
*நவரத்தின மோதிரம் அணிந்தால் நன்மை கிடைக்குமா?
ஒருவர் பிறந்த ராசி, நடசத்திரத்திற்குரிய நவரத்தின கல்லை மோதிரமாக அணிந்தால் நவக்கிரகங்களால் நன்மை கிடைக்கும்
டி.கந்தசாமி, சிவகங்கை.
* சிவனும் பார்வதியும் இருக்கும் போது விநாயகரை 'முதற்கடவுள்' என்பது ஏன்?
தடைகளை போக்கும் சக்தியை விநாயகருக்கு வழங்கியவர் சிவபெருமான். 'முதற்கடவுள்' என்னும் சிறப்பையும் வழங்கினார். இதனாலேயே விநாயகரை முதலில் வழிபடுகிறோம். தன் குழந்தைகளுக்கு பொறுப்புகளைக் கொடுத்து அழகு பார்ப்பவரே நல்ல பெற்றோர்கள்.
பி.லட்சுமி, பெங்களூரு.
*சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?
காமதேனு, கற்பக மரம் போல நினைத்ததை வழங்கும் ரத்தினத்திற்கு சிந்தாமணி என்று பெயர். இதைப் போல பக்தர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுபவர் சிந்தாமணி விநாயகர்.
அ.முருகன், திருத்தணி.
*வீட்டிலேயே அன்னதானம் செய்யலாமா?
தாராளமாகச் செய்யலாம். அன்னதானம் செய்த பின்னரே நாம் உண்ண வேண்டும்.