வரம் தரும் அன்னை
மே 13,2022,14:12  IST

பக்தர்களால் அன்போடு “ஸ்ரீஅன்னை” என்றும், “மதர்” என்றும், போற்றப்படுபவர் ஸ்ரீஅன்னை. பிரான்சில் பிறந்து வளர்ந்திருந்தாலும், இந்தியாவிற்கு வந்து இந்தியராகவே வாழ்ந்தவர். இந்தியா ஆன்மிக மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக உழைத்தவர். அதற்காக அரவிந்தரின் பணிகளுக்குத் துணை நின்றவர். கிருஷ்ணருக்காகத் தன்னையே அர்ப்பணித்த மீராவைப் போல, அரவிந்தரது புவியின் திருவுருமாற்றப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.
ஆசிரமம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி உதாரணம், ஸ்ரீஅன்னை உருவாக்கிய அரவிந்தர் ஆசிரமம். கனவு நகரமான ஆரோவில்லை உருவாக்கியவரும் அன்னை தான். துாய்மை, உண்மை, சத்தியம், அர்ப்பணிப்பு, சரணாகதி ஆகிய நற்பண்புகளை அன்னை தன் சாதகர்களுக்கு அடிக்கடி வலியுறுத்தி வந்தார். சாதகர்கள் மீது மட்டுமல்ல; மரம், செடி, கொடிகளின் மீதும் கூட மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டியவர்.
அன்னைக்கு மலர்கள் என்றால் மிகவும் பிரியம். தானே தோட்டத்தில் பல மலர்களைப் பயிரிட்டு வளர்த்து வந்தார். “ஒவ்வொரு மலரும் தனித்தனி குணாதிசயங்களைக் கொண்டவை, ஒவ்வொரு மனிதனும் மலர்களைப் போல தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்” என்பது ஸ்ரீஅன்னையின் கருத்து. மலர்களின் சிறப்பு பற்றி, “ஒரு மலர் தனக்கு என்று எதுவும் இல்லாமல், யாரையும் பாகுபடுத்திப் பார்க்காமல், எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறது. அன்பு, இனிமை, மென்மை என அனைத்தையும் நமக்கே தருகிறது. யாரிடமிருந்தும் எந்த லாபத்தையும், பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. எவர் ஒருவர் மலரின் இத்தகைய பண்புகளைப் பெறுகிறார்களோ, அவர்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்கிறார்.
“ஒவ்வொரு மனிதரும் மலரைப் போல திறந்த நிலையில், வெளிப்படையாக இருக்க வேண்டும்” என அன்னை சாதகர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். பல்வேறு சித்தாற்றல்கள் பெற்றிருந்தார் அன்னை. யாரும் எதுவும் தன்னிடம் சொல்லாத போதும்கூட நடந்த நிகழ்வுகளை அறியும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு சமயம் ஆசிரமத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கு அன்னை வருகை தருவதாக இருந்தது. எனவே அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர், ஸ்ரீஅன்னை வருவதற்கு முன்பே அந்தப் பகுதி முழுவதையும் சுத்தம் செய்து, அது சுத்தமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார். அங்கிருந்த பழைய பொருட்கள் அனைத்தையும் யார் கண்ணிலும் படாதவாறு, மூலையிலுள்ள கிடங்கு ஒன்றில் வைத்தார். சற்று நேரத்தில் அந்தப் பகுதிக்கு வருகை தந்தார் அன்னை. வந்தவர், நேராகக் குப்பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்றார். “இங்கு என்ன இருக்கிறது?” எனக் காப்பாளரை கேட்டு, அந்தக் கிடங்கைத் திறந்து காட்டுமாறு பணித்தார்.
குப்பைகளும், கொட்டாங்குச்சிகளும், தேவையற்ற பிற பொருள்களும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு ஒன்றும் கூறாமல் அங்கிருந்து அகன்றார். பிற நிகழ்ச்சிகளில் வழக்கம் போலக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் சாதகர்கள், அன்னையிடம், “நீங்கள் நேராக அந்தக் குப்பைகள் வைக்கப்பட்டிருக்கும்
இடத்துக்குச் சென்றது எப்படி” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு, “நான் அந்த இடத்திற்குள் நுழைந்ததுமே, 'இங்கு வாருங்கள்; வந்து எங்களை எப்படி பராமரிக்கிறார்கள் என்று பாருங்கள்'' என்னும் குரல் அந்தப் பகுதியிலிருந்து வந்தது.
அதனால் தான் அங்கு சென்றேன். அவை வைக்கப்பட்டிருக்கும் விதத்தையும் பார்த்தேன்” என்றார்.அதைக் கேட்டு ஆச்சரியமுற்றனர் சாதகர்கள். அந்தப் பிரிவின் பொறுப்பாளரோ, இனி குப்பைகளைச் சேர்ப்பதில்லை என்று உறுதிமொழி அளித்தார்.

ஸ்ரீஅன்னையின் வாழ்க்கை பற்றியும், அவர் போதித்த மலர் வழிபாடு பற்றியும் விரிவாக அறிய தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடான பா.சு.ரமணன் எழுதிய 'வரம் தரும் அன்னை' புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X