ஜான் என்னும் சிறுவன் தனது வீட்டருகே இருந்த மரத்தில் ஏறி விளையாடுவான். மரத்திற்கு அவனை பார்த்தாலே மகிழ்ச்சி பொங்கும். ஒரு நாள் அவன் வராததால், மரத்திற்கு வருத்தம் ஏற்பட்டது. நாள் மாதமானது. மாதம் ஆண்டுகளானது. சிறுவனாக சென்ற ஜான் இளைஞனாக வந்தான்.
''என்னப்பா.. ஏன் இவ்வளவு ஆண்டுகளாக என்னைப் பார்க்க வரவில்லை'' என வருத்தமுடன் கேட்டது மரம்.
''நாங்கள் வீடு மாறிவிட்டோம். அதுமட்டும் இல்லை. எனக்கு திருமணமும் ஆகிவிட்டது. குழந்தை, மனைவி என அவர்களை கவனித்துகொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது'' என்றான்.
''அதனால் என்னப்பா.. எப்போதாவது நேரம் கிடைத்தால் வரலாம் இல்லையா.. ஆஹா.. நீ வந்ததில் மறந்தே போய்விட்டேனே.. என்னிடம் உள்ள பழங்களை எடுத்து சாப்பிடு. பசியாக இருப்பாய் அல்லவா'' என சந்தோஷப்பட்டு பேசியது.
''எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. இப்போது அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் உங்களுடைய கிளைகள், பழங்கள் எல்லாம் எனக்கு வேண்டும்'' எனக்கேட்டான்.
''சரிப்பா.. அனைத்தையும் எடுத்துக்கொள். இனியாவது என்னைப் பார்க்க வருவாய்தானே.. என்னுடன் பேசுவதற்கு நீ மட்டும்தான் உள்ளாய்'' என உருகியது மரம்.
''நிச்சயமாக வருவேன்'' என்ற பொய் வாக்கை கொடுத்துவிட்டு கிளம்பினான். மரமும் அதை நம்பி காத்திருந்தது.
இது மரத்தின் கதையல்ல. பெற்றோர்கள் பற்றிய கதை. ஜானைப்போல எல்லோரும் சிறு வயதில் தாய், தந்தையோடு விளையாடுகிறோம். அவர்களும் நம்மை சமூகத்தில் மதிக்கக்கூடிய நபர்களாக மாற்றுகிறார்கள். ஆனால் பலரும் தனக்கென்று ஒரு குடும்பம் வந்தவுடன் அவர்களை கைவிட்டுவிடுகின்றனர். பின் ஏதாவது தேவை வந்தால் மட்டும் அவர்களை தேடுகிறார்கள். அதிலும் சிலர், 'இந்த மாதம் அம்மா, அப்பா என்னுடன் இருக்கட்டும். அடுத்த மாதம் நீ பார்த்துக்கொள்' என்று உடன்பிறந்தோருடன் சண்டையிடுகிறார்கள்.
'ஒருவேளை உணவிற்காக பெற்றோரை இப்படி அலைக்கழிக்கலாமா.. அவர்கள் மனம் என்ன பாடுபடும்' என்று அவர்கள் நினைப்பதே இல்லை. பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது பாசம், அன்பு மட்டுமே. பெற்றோர்கள் வயதானதும் குழந்தைகளாக மாறிவிடுகின்றனர்.
ஆனால் குழந்தைகள் பலரும் பெற்றோர்களாக மாறுவதில்லை.