மந்திரச்சொல் திருச்சிற்றம்பலம்
மே 13,2022,14:19  IST

தேவாரம், திருவாசகம் பாடிய நால்வரும் ஒவ்வொரு பதிகத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் 'திருச்சிற்றம்பலம்' என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு மந்திரச்சொல். இதன் உட்பொருளை அறிவதற்கு முதலில் வேதங்கள் கூறுவதை கேட்போம்.
* எல்லாவற்றையும் எளிதாக அறிபவரும், எல்லாவற்றையும் விசேஷமாக அறிபவரும் எவரோ இவ்வுலகில் காணப்பெறும் மகிமையெல்லாம் எவருடையதோ அந்த பரமாத்மா, பிரம்மபுரமாகிய (உச்சிக்குழி முதல் உள்நாக்கு வரை நீண்டுள்ள பிரம்மரந்திரத்தில்) சிற்றம்பலத்தில் துரியாதீதத்தில் எழுந்தருளியுள்ளார்.
அதர்வண வேதம், முண்டக உபநிஷதம்.
* சொர்க்கம் அடைவதற்குச் சாதனமான இதை, புத்தி குகையில் (பிரம்மரந்திரத்தில்) வைக்கப்பட்டுள்ளது.
யஜூர் வேதம், கடோபநிடதம்.
இதில் இருந்து சிற்றம்பலம் என்பது பிரம்மரந்திரத்தில் உயிராக வீற்றிருக்கும் துரியாதீதத்தைக் குறிக்கும் என்றும், தேவாரம், திருவாசகம் பாடிய நால்வரும் எப்போதும் இதைச் சிந்தித்தனர் என்றும் அறிகிறோம்.
இனி சித்தர்கள் கூறும் விளக்கங்களை ஆராய்வோம்.
புத்தியுடன் பூரணத்தைக் காண வேண்டும்
பூரணமே செல்வ மென்று புகல வேண்டும்
சித்தியுள்ள சிதம்பரமாம் அம்பலம் தோன்றும்
சிவ சிவா என் சொல்வேன் பூரணத்தின் செயலே.
- அகத்தியர் அமுத கலைஞானம்.
தவம் செய்யும் போது சூக்கும உடம்புடன் சுழுமுனை சுவாசம் சேருமாறு பார்க்க வேண்டும். சுழுமுனையே பெருஞ் செல்வம் எனக் கருத வேண்டும். அப்போது சித்தியளிக்கும் சிதம்பரம் என்னும் சிற்றம்பலம் தோன்றும்.
சொல்லுவேன் அண்டம் சுருதி முடிந்திடம்
வெல்லுவேன் பூரணம் வேதாந்த நிர்ணயம்
அல்லும் அடிமுடி அகண்டம தாகத்
தில்லைப்பதியில் சென்றிட முத்தியே.
- சட்டை முனிவர் தண்டகம்
அடிமுடி என்னும் சிவலிங்க வடிவ உயிர் அமைந்துள்ள 'தில்லைப்பதி' என்னும் விஞ்ஞானமய கோசத்திற்குச் சென்று விட்டால் தவம் முழுமை பெற்று முக்தி அடையலாம்.
அருளான அருளனைப் போல் பரமே என்பான்
அம்பலத்தைக் காணாத அசட னமே.
- கொங்கணர் கடைக்காண்ட சூத்திரம்
அம்பலம் என்னும் விஞ்ஞானமய கோசத்தை அறியாத அறிவிலி, இறையருள் பெற்றவன் போல் பரபிரம்மமே என்பான்.
அத்தனைச் சிற்றம்பலவனை என்னுயிர் ஆகி நின்ற
சுத்தனைச் சுத்த வெளி யானவனைச் சுக வடிவாம்
நித்தனை நித்த நிராதரமாகிய நின்மலனை
எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே.
- தாயுமானவர்
என்னுடைய சிரசில் சிற்றம்பலம் என்னும் விஞ்ஞான கோசத்தில் என் உயிராக விளங்கும் நடராஜபதியை, பரிசுத்தமானவனை, சிவலிங்க வடிவ சோதியானவனை, அழிவற்று என்றும் நிலைபெற்ற பரபிரம்மத்தை நான் என் தவத்தால் கண்டு இறைஞ்சுதற்கு எத்தனை நாள் ஆகுமோ....
ஞான மார்க்கம் பற்றிய நுால்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளன. நந்தீசர், தன்வந்திரி, மச்சேந்திர நாதர் போன்ற ஒரு சில வட நாட்டுச் சித்தர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து, தாம் வடமொழியில் ஆக்கிய நுால்களைத் தமிழாக்கம் செய்துள்ளதற்குச் சான்றுகள் உள்ளன. தேரையர் என்ற சித்தர், இந்த உண்மையை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு பாடுகிறார்.
வேணுமடா சிதம்பரத்தைப் பார்க்க வென்றால்
விரிவான தமிழது தான்வேணும் வேணும்
- தேரையர் சிவபூஜா விதி.
இந்த விரிவான ஆய்விலிருந்து சிற்றம்பலம், சிதம்பரம், அம்பலம் ஆகிய சொற்கள் நம் சிரசில் இறைவன் உயிராக விளங்கும் விஞ்ஞானமய கோசம் என்னும் இடத்தையே குறிக்கும் என்று தெளிவாக அறியலாம்.
இப்போது சைவத்திருமுறைகள் கூறும் சான்றுகளை காண்போம்.
அம்பலமாவது அகில சராசரம்
அம்பலமாவது ஆதிப் பிரானடி
அம்பலமாவது அப்பு தீ மண்டலம்
அம்பலமாவது அஞ்செழுத் தாமே.
- திருமந்திரம்.
அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரிசுற்றக் கிடந்தாரென் றயலார்
திரிச்சுற்றுப்பல பேசப் படாமுனம்
திருச்சிற்றம்பலம் சென்றடைந் துய்மினே.
- அப்பர் தேவாரம்.
இதன் பொருளாவது:
எமன் சுற்றி வளைக்குமாறு கர்ம வினையால் நெருக்குண்டு நீர், எரிப்பதற்குத் தீ சுற்றி வளைக்கக் கிடந்தார் என்று அயலார் பலவாறு சிரித்துப் பேசுவதற்கு முன்னால் தவம் செய்து திருச்சிற்றம்பலம் என்னும் விஞ்ஞானமய கோசத்தை அடைந்து முக்தி அடைவீராக.
பெரும் புனல் சூடும் பிரான் சிவன்
சிற்றம்பலம் அனைய
கரும்பன மென்மொழியாரும் அந்நீர்மையர் காணுநர்க்கே.
- மாணிக்கவாசகர் திருக்கோவையார்.

சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்
kamalakkannan1932@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X