மனித முகத்துடன் சிங்கப் பெருமாள்
மே 13,2022,14:25  IST

நரசிம்மர் என்றதும் சிங்க முகம் தானே நம் நினைவுக்கு வரும். ஆனால் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் மனித முகம் கொண்ட நரசிம்மர் கோயில் கொண்டிருக்கிறார். சாந்தமான நிலையில் உள்ள இவரை பிரதோஷ நாளில் துளசி மாலை சாத்தி வழிபட்டால் இரட்டிப்பான பலன் கிடைக்கும்.
முன்பொரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாளுக்கு கோயில் கட்டும் எண்ணம் எழுந்தது. ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய சிவனும், பெருமாளும் குறிப்பிட்ட இடத்தைக் காட்டி கோயில் கட்ட உத்தரவிட்டனர். அதன்படி இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டார். அதன் அருகிலேயே பெருமாளுக்கு சிலை ஒன்றை வடித்து பிரதிஷ்டை செய்தார். அவருக்கு 'நரசிங்கப் பெருமாள்' எனப் பெயர் சூட்டினார்.
காலப்போக்கில் பெருமாள் பிரசித்தி பெறவே, 'நரசிம்மர் கோயில்' என பெயர் பெற்றது. சூரியனால் ஏற்படும் தோஷம் நீக்குபவர் என்பதால் இவர் 'கதிர் நரசிம்மர்' எனப்படுகிறார். சூரியதிசை நடப்பவர்கள் இவரை தரிசித்தால் நன்மை பெருகும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும்.
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தியபடி நரசிம்மர் உள்ளார். எதிரில் கருடாழ்வார் சன்னதி உள்ளது. முதல் பூஜை பெருமாளுக்கும், அதன் பின் சிவனுக்கும் நடக்கிறது. சிவனுக்குரிய பரிவார மூர்த்தியான பைரவர் பிரகாரத்தில் உள்ளார். கடன் பிரச்னை, எதிரி தொல்லை தீர தேய்பிறை அஷ்டமியன்று அபிஷேகம் செய்கின்றனர். திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வீரஆஞ்சநேயருக்கு எலுமிச்சை, துளசி மாலை சாத்துகின்றனர். கமலவல்லி தாயார் தனி சன்னதியில் அருள்புரிகிறார்.
இங்குள்ள சக்கரத்தாழ்வார் அக்னி ஜுவாலை கிரீடத்துடன், பதினாறு கைகளிலும் ஆயுதங்கள் தாங்கியுள்ளார். இவருக்கு மேற்புறத்தில் உக்ர நரசிம்மர், கீழ்புறத்தில் லட்சுமி நரசிம்மர், சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர்.

எப்படி செல்வது : திண்டுக்கல் - பழநி சாலையில் 15 கி.மீ.,
விசேஷ நாள்: நரசிம்ம ஜயந்தி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 7:30 - மாலை 6:30 மணி
தொடர்புக்கு: 0451 - 2554 324
அருகிலுள்ள தலம்: வேடசந்துார் நரசிம்மர் கோயில் (17 கி.மீ.,)
நேரம் : காலை 7.30 - 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 99526 46389

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X