பி.பவானி, பொள்ளாச்சி.
*விருப்பம் நிறைவேற கோயிலில் மணி அடிக்கலாமா?
ணியடிக்க கூடாது. பூஜை நேரத்தில் மட்டுமே மணி ஒலிக்க வேண்டும். விருப்பம் நிறைவேற பிரார்த்தனை செய்தால் போதும்.
கே.திருமலை, சேரன்மாதேவி.
*பாமாலை, பூமாலை இதில் கடவுளுக்கு விருப்பமானது எது?
இரு கண்களில் சிறந்தது எது எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள். அதுபோலத்தான் இதுவும். தினமும் விளக்கேற்றி கடவுளுக்கு பாமாலை பாடுங்கள். பூமாலை சூட்டுங்கள்.
கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு.
*'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி' என்றால் என்ன?
ரிஷிகளில் தலைமையானவர் வசிஷ்டர். தவத்தில் ஈடுபடுவோரை ரிஷியாக அங்கீகரிக்கும் அதிகாரம் பெற்றவர். முன்பு மன்னராக இருந்த கவுசிகன், தவத்தில் ஈடுபட்ட போது நீண்ட காலத்திற்குப் பிறகே அவரை ரிஷியாக வசிஷ்டர் ஏற்றார். இந்த கவுசிகனையே 'உலகின் நண்பன்' என்னும் பொருளில் 'விஸ்வாமித்திரர்' எனப் போற்றுகிறோம்.
டி.தேவராஜ், டில்லி.
*நாக வம்சத்தினர் யார்? இப்போது இருக்கிறார்களா?
புராண அடிப்படையில் பாதாள உலகத்தை ஆட்சி செய்தவர்கள் நாகர்கள். இவர்களில் முக்கியமான எட்டு பேரை 'அஷ்ட மஹா நாகங்கள்' என்பர். இந்த வம்சத்தை சேர்ந்த நாகர் சமுதாயத்தினர் இப்போதும் இந்தியாவில் மலைவாழ் மக்களாக இருக்கிறார்கள்.
இ.நாகராஜன், சாத்துார்.
*திருவிழாவில் விழாகுழுவினருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?
திருவிழாவை சிறப்பாக நடத்த பணம், ஆள்பலம் அவசியம். அதனடிப்படையில் உருவானதே விழாக்குழு. அவர்களை கவுரவப்படுத்த பரிவட்டம், மாலை அணிவித்து மரியாதை செய்வது தானே முறை.
எல்.ஈஸ்வரி, நாகர்கோவில்.
*கோயில் கோபுர உயரத்திற்கு மேல் வீடு கட்டக் கூடாதாமே...
கோபுரத்தைக் காட்டிலும் பிற கட்டடத்தின் உயரம் குறைவாக இருக்க வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளுக்கும் இந்த விதி பொருந்தும்.
சி.சந்தோஷி, பெங்களூரு.
*காளி, இசக்கி போன்ற உக்ர தெய்வங்களை உற்று பார்க்கலாமா...
பார்க்கலாம். தெய்வங்களை மனம் குளிர தரிசிக்கவே கண்களைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
ஆர்.ராஜி, கள்ளக்குறிச்சி.
*வாழும் காலத்திலேயே கடவுளை உணர என்ன செய்ய வேண்டும்?
நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். தியானம், தவம், ஒழுக்கம், உயிர்களிடம் பரிவு இவற்றின் மூலம் வாழும் காலத்திலேயே அவரை உணரலாம்.
ந.தேவதாஸ், சென்னை.
*முற்பிறவி ஞாபகம் வர வாய்ப்புண்டா?
கடவுளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது. இப்பிறவிக்கான கடமையில் கவனம் செலுத்துங்கள். முற்பிறவி பற்றி நமக்கு தெரிந்தால் இப்பிறவியில் நிம்மதி இருக்காது.