நடனமும் சுடலைப்பொடியும்
மே 24,2022,09:51  IST

சிதம்பரத்தில் சிவபெருமானுக்கு ஒர் உருவச்சிலை தங்கத்தில் உருவாக்குமாறு சோழ மன்னர் சிற்பிகளுக்கு ஆணையிட்டார். சிற்பிகள் பலமுறை முயன்றும் சிலை உருவாகாததால் மிகவும் வருந்தினர். அப்போது சிவபெருமான், திருமூலர் முன்பாகத் தோன்றி அந்த சிலையை வார்க்க உதவி செய்யுமாறு ஆணையிட்டார். அதன்படி திருமூலர் ககனமார்க்கமாகச் சென்று சிலையை வார்க்க உதவி செய்த செய்தி போகர் கற்பம் 300 என்ற நுாலில் காணப்படுகின்றன.
ஒரு சித்தரின் துணையோடு உருவாக்கப் பெற்ற நடராஜரின் உலகம் அறிந்திராத பல ரகசியங்கள் பொதிந்திருப்பதை ஞானிகள் வழி வழியாகத் தம் சீடர்களுக்கு நேரில் கூறி வருகின்றனர். அந்த வகையில் சில செய்திகள்:
* நம் சிரசிலுள்ள பிரம்மரந்திரத்தின் எட்டாவது நிலையாகிய விஞ்ஞானமயகோசத்தில் உயிராக கடவுள் இருக்கும் இடத்திற்கு மேலே ஒன்பதாவது நிலையான ஆனந்தமய கோசத்தில் அமிர்தம் ஊறுவதால் சிவபெருமானின் சடாமுடியில் கங்கை இருப்பதாகக் காட்டப்பெற்றது.
* சூரியனாகிய சிவத்தில், சந்திரனாகிய சக்தி பாதியாக இணைந்துள்ளதைக் குறிப்பதே பிறைச்சந்திரனாகும்.
* சுவாசத்தின் நிலை தொண்டை என்பதால் ஒலியோடு சுவாசத்தை வெளிப்படுத்தும் பாம்பு கழுத்தில் உள்ளது.
* சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கையும் குறிப்பவை நான்கு கைகள், உடுக்கை யோகத்தையும், எரி தழல் ஞானத்தையும் குறிக்கும்.
* கால் என்ற சொல்லுக்கு காற்று என்று பொருள். கால் இரண்டாக இருப்பதை போன்று சுவாசமும் இடகலை, பிங்கலை என இரண்டாக உள்ளது. அவற்றைக் கொண்டு தவம் செய்வது எப்படி என்பதைக் குறிப்பதே காலைத் துாக்கி நின்றாடும் கோலமாகும். இவையனைத்தும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை.
இதற்கு ஆதாரமாக திருமூலரின் இப்பாடல் இருப்பதை காணலாம்.
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கையாரும் அறிகிலர்
ஆதி நடமாடல் ஆரும் அறிந்த பின்
ஆதிநடமாடலாம் அருட்சத்தியே
- திருமந்திரம்.
சிவன் கால்களை துாக்கி நடனமாடினான் எனக் கூறுவோர் அறிவில்லாதவர், அவன் விஞ்ஞானமய கோசத்திலிருந்து கொண்டு இடகலை, பிங்கலை இரண்டையும் மாற்றி மாற்றி இரு நாசித் துவாரங்களிலும் ஓய்வின்றி இயக்குவதை எவரும் அறிய மாட்டார்கள். தவத்தால் உயிராகிய சிவலிங்க வடிவம் சுவாசக் காற்றை (காலை) மாற்றி மாற்றி இயக்குவதைக் கண்டால் அந்த இயக்கமே நடராஜரின் நடனமாக உவமிக்கப் பெற்றதாக அறிவர்.
சித்தர் பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கம் கூறுகிறேன்.
கொட்டுமொரு தேளுருவாய் நிற்கும் பாரு
கூட்டமிட்டுப் பாராதே குறிகள் தோன்றும்
சுட்ட சுடு காடுமது வெளியு மாகும்
சொல்லுதற்கு வாய் விளங்காச் சூட்சம் தானே.
--கருவூரார் பூஜா விதி.
மனிதனுடைய நெற்றிக்குள்ளே கோடி சூரியப்பிரகாசம் பொருந்திய உயிராகிய பரப்பிரம்மம் இருப்பதால் நெற்றிக்கு சுட்ட சுடுகாடு என்று பெயர் என்கிறார் கருவூரார். செடங்காண திருக்கண்ட ஆகமத்தில்
சித்த அதிரேச மற்றுக் காம மற்றுக்
குடம் போல விகாரமற்று குரோதமற்று
கூ கூ கூ கோப மற்று மோகம் தள்ளே.
தள்ளப்பா மதமொடு மாச்சரியம் தானும்
சாகசமாய் ஈரிளையும் அசூசையப்பா
விள்ளப்பா டம்பமொடு தருப்பகம் தானும் விதமான ஆங்காரம் கூடத்தள்ளு
கள்ளப்பா கொண்டிருந்த மயக்கம் போலே கலந்த இந்தப் பதிமூன்றும் காலனாமே.
- கொங்கணர் மெய்யான பாடல்கள்.
காமம், குரோதம் முதலான பதிமூன்று தீயசக்திகளையும் எரித்து சாம்பலாக்கிய சூரியன், சந்திரன் அக்கினி மூன்றும் இணைந்த சுழுமுனை நுண்ணிய துகள்களால் ஆன மூன்று கோடுகள் போன்று திருமேனியில் விளங்குமாறு தோன்றுவார் கடவுள். இந்த ஞான விளக்கங்களை சான்றோர்கள் ஆழ்ந்து சிந்திப்பார்களாக.

சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்
kamalakkannan1932@gmail.com

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X