சங்கடம் தீர்க்கும் சங்கரன்கோவில்
மே 24,2022,09:58  IST

தானே பெரியவன் என்ற எண்ணம் நீங்கவும், குடும்ப ஒற்றுமைக்கும், நாக தோஷம் தீரவும் வழிபாடு செய்யும் திருத்தலம் சங்கரன்கோவில்.

புராண அடிப்படையில் பாதாள உலகத்தை ஆட்சி செய்தவர்கள் நாகர்கள். நாக அரசர்களாகிய சங்கன், பதுமனுக்கு இடையே சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகம் தீர தேவகுருவிடம் சென்றனர். அவரும் சிவபெருமான்
முற்காலத்தில் சங்கர நாராயணராக பார்வதிக்கு காட்சி கொடுத்த வரலாற்றை கூறி அவ்வடிவம் காண நீங்களும் புன்னை மரங்கள் நிறைந்த வனத்திற்கு செல்லுங்கள் எனக் கூறினார். சந்தேகம் நீங்க அவர்கள் புன்னை வனத்துச் சிவனை வழிபட்டனர். அதன் பயனாக இருவருக்கும் சங்கர நாராயண தரிசனம் தந்தார் சிவபெருமான்.

திருநெல்வேலி மானுாரை ஆட்சி செய்த மன்னன் உக்கிரபாண்டியன் மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு செல்வது வழக்கம். ஒருமுறை மன்னன் படைகளோடு மதுரைக்கு செல்லும் போது, பட்டத்து யானை படுத்துவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் யானையை எழுப்ப முடியவில்லை. அச்சமயம் அப்பகுதியை காவல் செய்த மணிக்ரீவன் என்பவன், மன்னனிடம் வந்து வனத்தின் ஒரு பகுதியை சீர்படுத்தும் போது, புற்றொன்றில் திடீர் என்று ரத்தம் வருவதாக சொன்னான். மன்னனும் அந்த இடத்தை பார்த்த போது வால் அறுந்த பாம்புடன் சிவலிங்கம் இருப்பதை கண்டான். அச்சமயம் அசரீரி ஒன்று கேட்க, அதன்படி காட்டை, நாடாக்கி கோயிலை கட்டி சங்கரன்கோவில் என்ற ஊரையும் உருவாக்கினான் மன்னன்.

தென்பாண்டிய நாட்டின் பஞ்ச பூத ஸ்தலங்களில் முதல் தலமான இக்கோயிலில் மூன்று முக்கிய சன்னதிகள் உள்ளன. கருவறை சங்கரலிங்க சுவாமி சன்னதிக்கு செல்லும்போது மன்னனையும், அவரது அமைச்சரையும் துாண்களில் காணலாம். இவர்கள் உருவாக்கிய சித்திரை திருவிழா இன்றும் நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள சங்கர நாராயணரையும், கோமதியம்மனையும் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும்.

எப்படி செல்வது:திருநெல்வேலியிலிருந்து 52 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடி தபசு, கந்தசஷ்டி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 6:00 -12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99767 28818, 04636 - 222 265
அருகிலுள்ள தலம்: கழுகுமலை முருகன் கோயில் 30 கி.மீ.,
நேரம் : காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04632 - 251 225

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X