ஒரு காலத்தில் அரசர்களின் குலதெய்வமாக விளங்கியவள் கனக மகாலட்சுமி. 'வாய்மையின் தாய்' எனப் போற்றப்படும் இந்த அம்மனை தரிசித்தால் வறுமை நீங்கும், வாழ்வு சிறக்கும் வாருங்கள். தரிசிப்போம்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள புருகிப்பேட்டையில் அமைந்துள்ளது கனக மகாலட்சுமி கோயில். முன்பு ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்தவர்கள் கிணறு ஒன்றை வெட்டினர். அவர்களுக்கு பூமியில் இருந்து கைபின்னமான தேவி சிலை ஒன்று அகப்பட்டது. அப்போது அசரீரி, “இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் குலதெய்வமான கனக மகாலட்சுமி நான். யாம் இருக்கும் இடத்தில் வளம் கொழிக்கும். உருவம் இல்லாமல் இருந்த எனக்கு மன்னர் வடித்தது தான் இந்தச் சிலை'' என ஒலித்தது. திருமகளின் வாக்கை உணர்ந்த மக்கள் கோயில் எழுப்ப முடிவு செய்தனர். “வானமே கூரையாக இருப்பதில் தான் எனக்கு விருப்பம்' என தேவி அருள அப்படியே கூரை இன்றி கோயில் கட்டினர். திருமகள் வரவால் ஊர் செழித்தது.
இப்பகுதி மக்கள் தேவியை 'வாய்மையின் தாய்' என்கின்றனர். பிறந்த குழந்தைகளை தேவியின் காலடியில் கிடத்தினால் நோய் அணுகாது. இந்த தேவியை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், மகப்பேறு கிட்டும். கனக மகாலட்சுமிக்கு வியாழக்கிழமை உரிய நாளாகும். மார்கழியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். அப்போது லலிதா சகஸ்ர நாமம், அன்னமய்யா பாடல்கள் பாடப்படுகின்றன. விசாகபட்டினம் நகரின் வளர்ச்சிக்கு இந்த தேவியே காரணம்.
எப்படி செல்வது: விசாகப்பட்டினத்தில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி
நேரம்: அதிகாலை 5:00 மணி - நள்ளிரவு 12:00 மணி
தொடர்புக்கு: 89125 66515, 94910 00651
அருகிலுள்ள தலம்: நரசிம்ம பட்டினம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
நேரம் : காலை 7:00 - இரவு 7:00 மணி