கேளுங்க சொல்கிறோம்
மே 26,2022,10:18  IST

டி.கமலா, டில்லி.
*குருகுல கல்வியை நடைமுறைப்படுத்தினால்...
வருங்காலம் வளமாக அமையும். குழந்தைகள் ஒழுக்கம், படிப்பில் சிறந்து விளங்குவர். தற்போதுள்ள கல்விமுறையில் குருகுல மரபுகளை இணைத்து புதிய கல்வித்திட்டத்தை உருவாக்கலாம்.

எம்.ஹரீஷ், சென்னை.
*பொய் சத்தியம் செய்வது பற்றி...
அசட்டு தைரியம் உள்ளவர்களே பொய்சத்தியம் செய்கிறார்கள். இவர்களுக்கு கடவுளின் தண்டனை கிடைக்கும்.

வி.காஞ்சனா, விழுப்புரம்.
*திருவுளச்சீட்டு மூலம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா…
திருவுளச்சீட்டின் மூலம் தீர்வு காண விரும்புவோர் கடவுளை முழுமையாக நம்ப வேண்டும். இதில் எந்த முடிவு வந்தாலும் அதை ஏற்கும் மனம் வேண்டும்.

ஆர்.வனிதா, சங்கரன்கோவில்.
*வாசலில் சிலர் மஞ்சள்நீர் தெளிக்கிறார்களே...
மஞ்சள் நீரை தெளித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும், வாசல், பூஜையறை, சுபநிகழ்ச்சி, மங்களச் சடங்குகள் நடக்கும் இடங்களிலும் தெளிக்கலாம்.

பி.ராகவன், கன்னியாகுமரி.
*திருக்கல்யாணத்தின் போது பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றுகிறார்களே...
திருக்கல்யாணம் என்பது உலகிற்கு நன்மை தரும் சுபநிகழ்ச்சி. பக்தர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என இந்த நிகழ்ச்சியின் போது சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஜபிப்பர். கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என அப்போது பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றுகின்றனர்.

எஸ்.மீனா, பெங்களூரு.
*வீட்டில் சுவாமி படங்கள் (காலண்டர்) நிறைய உள்ளன. என்ன செய்யலாம்?
தேவையானதை பூஜையறையில் வைக்கலாம். மற்றவற்றை அன்பளிப்பாக கொடுங்கள்.

எம்.ராஜம்மாள், காஞ்சிபுரம்.
*கோயிலுக்கு போகாமல் வீட்டிலிருந்தே வழிபடலாமா?
வீட்டருகில் உள்ள கோயிலுக்கு நேரில் செல்லுங்கள். முடியாவிட்டால் மனதிலேயே வழிபடுங்கள்.

ஆர்.மோகன ரங்கன், மதுரை.
*தினமும் கனவுகளால் சிரமப்படுகிறேன். பரிகாரம் உண்டா...
ஆன்மிக சொற்பொழிவு, பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் கேட்ட பின்னர் துாங்குங்கள். கனவு தொல்லை இருக்காது.

கே.ஆனந்த், பொள்ளாச்சி.
*மனைவியிடம் கணவர் ஆசி பெறலாமா?
ஆசி பெறக் கூடாது. மனைவிக்கு ஆயுள் குறையும்.

எம்.ரங்கதுரை, ராமநாதபுரம்.
*தீட்சையளிக்கும் குருநாதருக்குரிய தகுதிகள் யாவை?
* தினமும் சிவபூஜை செய்தல்
* இல்லற தர்மத்தை பின்பற்றுதல்
* அன்பு, கருணை, பணிவு, மனித நேயமுடன் இருத்தல்.
* ஆன்மிக அறிவு

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X