* முருகனின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதல்படை வீடாகும். இங்கு முருகனின் வேலுக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.
* திருப்பரங்குன்றம் குடைவரை கோயிலாக அமைந்திருப்பதால் மலையே கோயில் விமானமாக உள்ளது. எனவே கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை.
* சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்கையம்மன் என ஐந்து தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடைவரையில் இங்கு அருளுகின்றனர்.
* பரம்பொருளாகிய சிவபெருமான் குன்று வடிவில் இங்கு அருளுவதால் சுவாமி 'பரங்குன்றநாதர்' என்றும், தலம் 'பரங்குன்றம்' என அழைக்கப்படுகிறது.
* தோல் வியாதியால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள லட்சுமி தீர்த்தக்கரையில் உள்ள விநாயகரை வழிபட்டு உப்பு, மிளகை தீர்தத்தத்தில் இட்டால் நோய் குணமாகும்.
* தமிழ் மாதப்பிறப்பு, பவுர்ணமி நாளில் இங்கு கிரிவலம் சென்றால் நினைத்தது நிறைவேறும்.
* திருமணத்தடை, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபடலாம்.
* அறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகன் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார்.
* பொதுவாக கோயில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு மஹாவிஷ்ணு உள்ளார். எனவே இக்கோயிலை 'மால்விடை' (மால் - திருமால், விடை -நந்தி) கோயில் என்பர்.
* முருகனுக்கு இங்கு 'சோமசுப்பிரமணியர்' என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனின் மறுபெயர்.
* பன்னிரு திருமுறைகளில் ஒன்று திருமுருகாற்றுப்படை. முருகனின் அறுபடை வீடுகளின் பெருமைகளை கூறும் இந்நுாலை, இந்த தலத்தில்தான் இயற்றினார் நக்கீரர்.
* திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில்தான், மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.
* 773 வது ஆண்டு பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னரின், படைத்தலைவரான சாத்தன் கணபதி என்பவரால் சுப்ரமணியசுவாமியின் கருவறை எழுப்பப்பட்டது.
* வீரப்ப நாயக்கர், திருமலை நாயக்கர் ஆகிய மன்னர்களும் இக்கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளனர்.
* கோயிலுக்கு வடக்கில் சுவாமி சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் உள்ளது.
* திருப்பரங்குன்றம் என்னும் இம்மலையை தினமும் வலம் வந்தால், நமது வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என திருஞானசம்பந்தர் கூறுகிறார்.
* தமிழ் இலக்கியத்தில் இத்தலத்திற்கு தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் உள்ளன.