கே.சந்தோஷ், புதுடில்லி
*திருமணம் தடைபடுவதால் என் பெற்றோர் வருந்துகிறார்கள்... என்ன செய்யலாம்?
சடையாய் எனுமால்; சரண் நீ எனுமால்' எனத் தொடங்கும் திருஞான சம்பந்தர் தேவாரத்தை தினமும் பாடுங்கள். பெற்றோர் மனம் குளிரும் விதத்தில் கடவுள் அருளால் உங்களுக்கு திருமணம் நடக்கும்.
கி.மாரியப்பன், ராஜபாளையம்
*கால் வலியால் அவதிப்படுகிறேன். பரிகாரம் சொல்லுங்கள்.
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமிக்கு செவ்வாய்தோறும் காலையில் சாப்பிடாமல் விரதமிருங்கள். கால் வலி சரியானதும் கோயில் பிரகாரத்தை அடிப்பிரதட்சிணம் செய்வதாக நேர்ந்து கொள்ளுங்கள்.
என்.குமரேசன், கோவை.
*பெண்கள் புகுந்த வீட்டில் நிம்மதியாக வாழ பரிகாரம் சொல்லுங்கள்.
சிவன் கோயில்களில் உள்ள அம்மன் சன்னதி அல்லது பெருமாள் கோயில்களில் உள்ள தாயார் சன்னதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றுவது நன்மையளிக்கும்.
அ.ஜெயபால கிருஷ்ணன், சென்னை.
*சிவன் கோயிலில் பூஜை நேரங்களில் கைலாய வாத்தியம் இசைக்கிறார்களே... சரியா?
நடை திறந்ததும் நடக்கும் உஷத் காலம், நடை சாத்தும் முன் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது கைலாய வாத்தியம் இசைக்கக் கூடாது. மற்ற பூஜையின் போது (காலசந்தி, உச்சிக்காலம், சாய ரட்சை, ராக்காலம்) இசைக்கலாம்.
அ.ராமலட்சுமி, தென்காசி.
*சிவன், பெருமாள் கோயில்களுக்கு ஒரே நாளில் செல்லலாமா?
செல்லலாம். 'அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவர் வாயில் மண்ணு' என்பார்கள். இருவரும் சேர்ந்திருக்கும் 'சங்கர நாராயணர்' திருக்கோலத்தை வழிபடுவது இன்னும் விசஷேம்.
த. மணிகண்டன், தேனி.
*'நாம் ஒன்று நினைக்க...தெய்வம் ஒன்று நினைக்கும்' என்கிறார்களே..
ஆசைப்பட்டதெல்லாம் நடப்பதில்லை. விதி வகுத்த பாதையில் நம் வாழ்வு அமைகிறது என்பதையே இப்படி சொல்கிறார்கள்.
வி.ஸ்ரீமதி, விழுப்புரம்
*பக்தர்களில் சிலர் சாமியாடுகிறார்களே எப்படி?
தெய்வத்திடம் ஈடுபாடு அதிகரிக்கும் போது சிலருக்கு மனதில் மருட்சி(தன்னிலை மறந்து பரவசப்படுதல்) உண்டாகும். இவர்களை 'மருளாளிகள்' என்பர். இவர்களே கோயில்களில் பூஜை நடக்கும் போது சாமியாடுகின்றனர்.
பி.காமாட்சி, பெங்களூரு.
*அர்ச்சகர்கள் சிலர் நைவேத்தியத்தை வீட்டில் செய்கிறார்களே...
கோயிலிலுள்ள மடப்பள்ளியில் தான் நைவேத்யம் செய்ய வேண்டும். இருந்தாலும் கோயில்களில் மடப்பள்ளி, பரிசாரகர்(சமையல்காரர்), தளிகை பொருட்கள் (பிரசாதம் செய்வதற்கான பொருட்கள்) முறையாக இல்லாததால் இந்த நிலை உருவானது.