கே.சதீஷ், திருவள்ளூர்
*பிறரிடம் பணம் வாங்குவது போல் அடிக்கடி கனவு கண்டால்...
பணப் பிரச்னை அல்லது பணத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும். வெள்ளி அன்று நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபடுங்கள்.
ஆர்.ஆகாஷ், கோவில்பட்டி
*நம்பிக்கை, மூடநம்பிக்கை வேறுபாடு என்ன?
கடவுளை நம்பி உழைத்து வாழ்வது நம்பிக்கை. பணக்காரனாக வாழும் ஆசையால் தவறாக வழிகாட்டுபவர்களை நம்புவது மூடநம்பிக்கை.
ஆர்.வேல்முருகன், மைசூரு
*மடாதிபதிகளுக்கு தீபாராதனை காட்டுவது சரியா?
குருநாதர் என்ற முறையில் மடாதிபதிக்கு தீபாராதனை காட்டலாம். விருப்பம் இல்லாவிட்டால் அமைதி காப்பது நல்லது.
சி.மணிமேகலை, ஊட்டி
*ஜோதிடத்தில் பரிகாரமாக பல தெய்வங்களை வழிபடுகிறார்களே ...
நோய்க்கு தக்கபடி மருந்து கொடுப்பது போல, கஷ்டங்களுக்குத் தகுந்தபடி பல தெய்வங்களை வழிபடுவது அவசியம்.
பி.ராதிகா, சென்னை
*சமேத அல்லது உடனுறை என்பதன் பொருள் என்ன?
பெண்ணில் நல்லாளுடன் பெருந்தகை இருந்ததே' என்கிறது சம்பந்தர் தேவாரம். அம்மன், சுவாமி பெயர்களைச் சேர்த்து தம்பதியாகச் சொல்லும் போது 'சமேத அல்லது உடனுறை' என்றே குறிப்பிட வேண்டும். உதாரணமாக சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அருள்புரிகிறார்.
ஆர்.ரங்கநாதன், சிவகங்கை
*தேரோட்டம் சொல்லும் தத்துவம் என்ன?
தேர் என்பது மனித உடல். அதை இழுக்கும் குதிரைகளே ஐம்புலன்கள். மனம் என்பது கடிவாளம். அதை சரியாக செலுத்தும் அறிவே தேரோட்டி. பவனி வரும் கடவுளே நம் உயிர். அறிவுத் திறத்தால் நமக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்து வாழ்வதே தேரோட்ட தத்துவம்.
எம்.வைஜயந்தி, புதுடில்லி
*துளசி மாலை, ருத்ராட்ச மாலை - எதை அணிவது நல்லது?
இரண்டும் நல்லது தான். சிவ பக்தர்கள் திருநீறு பூசி ருத்ராட்சம் அணிவதும், பெருமாள் பக்தர்கள் திருமண் இட்டு துளசி மாலை அணிவது சிறப்பு.
சி.விவேக், களியக்காவிளை
*என் பைக்கில் பன்றி அடிபட்டு விட்டது. அதை பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம். பெருமாளுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, எள்சாதம் நிவேதனம் செய்து அதை தானமாக கொடுங்கள்.
கே.ராஜேஷ், மதுரை
*என்னுடன் இருப்பவர்களே வஞ்சகம் செய்கிறார்கள். என்ன செய்யலாம்?
ஏன் வருந்துகிறீர்கள்...உங்களின் திறமையை பயன்படுத்தி முன்னேற கிடைத்த வாய்ப்பாக கருதுங்கள். கடவுளின் பொறுப்பில் இதை விட்டுவிடுங்கள்.
சி.ஸ்ரீவித்யா, கோவை
*சிவபூஜையில் கரடி என்றால் என்ன?
மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு பொறுக்காமல் அவர்களுக்கு தீங்கு நினைப்பவரையே இப்படி குறிப்பிடுவர்