மனதில் ஏற்படும் மனக்குழப்பம் தீர வேண்டுமா! மைசூர் அருகிலுள்ள தொண்டனுார் கோயிலுக்கு வாங்க! நாராயணரை தரிசனம் செய்யுங்கள், மனம் தெளிந்து செல்வீர்கள்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த ராமானுஜர் மைசூரிலுள்ள தொண்டனுாரில் தனது சீடரான நம்பியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது சமண மன்னர் பிட்டிதேவனுடைய ஆட்சியில் தொண்டனுார் இருந்தது.
அச்சமயம் அவரது மகளுக்கு பேய் பிடித்து கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை. மதகுருமார்கள் முயற்சித்து பயன் ஏதுமில்லை.
மன்னன் மகளை ராமானுஜரிடம் அழைத்து வந்தார் நம்பி. அந்தப் பெண்ணுடன் மலை மீதுள்ள நரசிம்மர் கோயிலுக்குச் சென்றார் ராமானுஜர். அங்குள்ள நரசிம்ம தண்டத்தை அவளின் தலை மீது வைத்து, தன் கமண்டல தீர்த்ததை தெளித்து குணமாக்கினார்.
இதை அறிந்த சமணர்கள் பொறாமையால் ராமானுஜர் மீது வீண்பழி சுமத்தினர். இதன்பின் சமணர்களுடன் வாதத்தில் ஈடுபட்ட ராமானுஜர் விஷ்ணுவின் பெருமையை நிலைநாட்டினார்.
இதன் பின் மன்னர் பிட்டிதேவன் தன் பெயரை விஷ்ணுவர்த்தன் என மாற்றிக் கொண்டார். ராமானுஜருக்கு ஸ்ரீரங்கப்பட்டினம் கிராமத்தை தானமாக வழங்கினார். அவரின் வழிகாட்டுதலுடன் ஐந்து கோயில்களை கட்டினார். அதில் தொண்டனுார் கோயிலும் ஒன்று. இங்குள்ள மூலவர் நம்பி நாராயணரின் உயரம்18 அடி. மகாவிஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் இங்கு இடம் மாறியுள்ளது. மனக்குழப்பம் உடையவர்கள், சித்தம் கலங்கியவர்கள் இங்கு வேண்டினால் தீர்வு கிடைக்கும்.
எப்படி செல்வது: மைசூரில் இருந்து சுமார் 45 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை, வைகாசி மாத திருவிழா மார்கழி வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 9:30 - மாலை 5:30 மணி
தொடர்புக்கு: 82362 51795
அருகிலுள்ள தலம்: மேலக்கோட்டை நாராயணர் கோயில்
நேரம் : காலை 8:30 - 1:30 மணி; இரவு 7:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 82362 99839