கேளுங்க சொல்கிறோம்
ஆகஸ்ட் 09,2022,14:38  IST

எஸ்.கல்பனா, தியாக துருகம், கள்ளக்குறிச்சி.
*தேர் மீது ஏற பெண்களை அனுமதிக்கலாமா?
பவனியின் போது அர்ச்சகர், கோயில் பணியாளர்களைத் தவிர மற்றவர்கள் தேரில் இருப்பது கூடாது. நிலைக்கு வந்த பின்னர் தேர் மீதேறி பக்தர்கள் அனைவரும் சுவாமியை தரிசிக்கலாம்.

எம்.கவிதா, சைதாப்பேட்டை, சென்னை.
*மெய்யன்பர்கள், அடியார்கள் - விளக்கம் தருக.
வேடதாரியாக இல்லாமல் உண்மையுடன் வழிபடுவோர் மெய்யன்பர்கள். அர்ப்பணிப்புடன் கடவுளுக்குத் தொண்டு செய்வோர் அடியார்கள்.

ஆர்.புவனேஸ்வரி, வடக்கிபாளையம், கோவை.
*மதத்தை பாதுகாப்பது அவசியமா?
தர்மத்தை பின்பற்றி கடவுளை அடைய வழிகாட்டுவது மதம். அதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியது நம் கடமை.

பி.சஞ்சீவிராஜ், வேடசந்துார், திண்டுக்கல்.
*கோயில் பிரசாதத்தில் முடி கிடந்தால் அபசகுனமா?
அபசகுனம் இல்லை. இது கடவுளுக்கு செய்த அபச்சாரம். சம்பந்தப்பட்டவர்கள் வருந்துவதும், துாய்மையைக் கடைபிடிப்பதும் மிக அவசியம்.

கே.சந்தானம், திசையன்விளை, திருநெல்வேலி.
*பசுவின் கோமியம், கடல்நீர் - புனிதமானது எது?
கோமியம். கோபூஜையின் போது பசுவை வலம் வந்து வழிபட்டால் புனிதமான கடல்களில் எல்லாம் நீராடிய புண்ணியம் சேரும்.

ஆர்.ஆர்த்தி, பெங்களூரு.
*சுவாமிக்கு அலங்காரம் செய்யும் போது திரை இடுவது ஏன்?
மனிதர்களைப் போல குளியல்(அபிஷேகம்). உடை மாற்றுதல் (அலங்காரம்), உணவளித்தல் (நைவேத்தியம்) ஆகியவை வழிபாட்டில் இடம் பெற்றுள்ளன. அவற்றை மறைவாக செய்ய வேண்டும் என்பதால் சன்னதியை திரையிடுகிறார்கள்.

எம்.ரகுவரன், மேலுார், மதுரை.
*பக்தர்களுக்கு மட்டும் அதிக துன்பம் ஏற்படுகிறதே ஏன்?
அறிந்தோ அறியாமலோ முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவே துன்பங்கள். கர்மக் கணக்கை இந்த பிறவியுடன் முடித்து பேரின்பத்தை அடையச் செய்வதே இதன் நோக்கம்.

சி.சிந்துஜா, தென்தாமரைக்குளம், கன்னியாகுமரி.
*புதுவீட்டில் குடியேறும் போது பால் காய்ச்சினால் மட்டும் போதாதா...
போதாது. கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களை நடத்துவது அவசியம்.

பி.அட்சயா, திர்லோக்புரி, புதுடில்லி.
*சிலருக்கு மட்டும் திருமணம் அமையாமல் தடைபடுகிறதே...
ஜாதகத்தில் ஏழு, எட்டாம் பாவங்கள் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும். இவற்றை ஆராய்வதோடு மணவாழ்க்கையைத் தரும் கிரகமான சுக்கிரனையும் ஆராய வேண்டும். ஜோதிடரிடம் ஜாதகத்தைப் பார்த்து பரிகாரம் செய்தால் திருமணம் விரைவில் அமையும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X