மாங்கல்யம் காத்திடும் மங்களாம்பிகை
செப்டம்பர் 28,2022,14:22  IST

கும்பகோணம் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதர் கோயிலில் மங்களாம்பிகை குடி கொண்டிருக்கிறாள். இந்த அம்மனை தரிசிப்பவர்கள் மாங்கல்ய பலத்துடன் சுமங்கலியாக வாழும் பாக்கியம் பெறுவர்.
ஒருசமயம் காலமாமுனிவர் விதிப்படி தொழுநோயால் அவதிப்பட வேண்டியிருந்தது. ஆனால் நவக்கிரகங்கள் அதை தடுத்ததால் பிரம்மாவின் சாபத்திற்கு ஆளாயினர். அவர்கள் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளிய சிவனை நோக்கித் தவமிருந்து விமோசனம் பெற்றனர்.முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தவர் அலைவாணர். மன்னருக்கு தெரியாமல் இத்தலத்தில் இருந்த சுயம்பு லிங்கத்திற்கு அரசுப்பணத்தில் கோயில் கட்டினார். விஷயம் அறிந்த மன்னர் அமைச்சருக்கு மரண தண்டனை விதித்தார். அலைவாணர் தன் மரணத்துக்குப் பின்னர் பூதவுடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் செல்ல கேட்டிருந்ததால் அங்கேயே எடுத்துச் சென்றனர். இதனிடையே அமைச்சரின் மனைவி மாங்கல்ய பாக்கியம் அருளும்படி இத்தல அம்பிகையிடம் சரணடைந்தாள்.
அம்பிகையும் அமைச்சருக்கு உயிர்பிச்சை தரும்படி சிவனிடம் முறையிட அவரும் ஏற்றார். அமைச்சருக்கு உயிர் கொடுத்ததால் சுவாமிக்கு 'பிராண நாதர்' என்றும், அம்மனுக்கு 'மங்களாம்பிகை' என்றும் பெயர் ஏற்பட்டது.
இங்கு சிவலிங்கத்தின் பாணம், ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவனை வழிபட்டதாக ஐதீகம். ஞாயிறன்று உச்சிகால பூஜையில் உப்பில்லாத தயிர்சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர். இதனால் பிதுர் தோஷம் நீங்கும். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடக்கிறது.
மங்கள விமானம், மங்களாம்பிகை, மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் திகழ்வதால் பஞ்ச மங்கள க்ஷேத்ரம் எனப்படுகிறது.
மங்களாம்பிகை தெற்கு நோக்கி அருள்கிறாள். அம்மனின் வலது கையில் சாத்திய தாலிக்கயிறுகளை பிரசாதமாக தருகின்றனர். இதை அணியும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.

எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ., துாரத்தில் ஆடுதுறை. அங்கிருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0435 - 247 0480
அருகிலுள்ள தலம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் (17 கி.மீ.,)
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 0435 - 242 0276

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X