பாவம் தீர்க்கும் பாட்டு
செப்டம்பர் 28,2022,14:43  IST

திருவனந்தபுரம் பழஞ்சிறைதேவி கோயிலில் பாடும் தோற்றப்பாட்டு கேட்டால் முன்வினைப்பாவம் தீரும்; விருப்பம் நிறைவேறும்.
கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்பர். இங்குள்ள நீலாற்றங்கரையில் தேவியின் தரிசனம் பெற வேண்டி தவமிருந்தார் யோகீஸ்வரர் என்னும் முனிவர். அவருக்கு காட்சியளித்த தேவி, 'இங்கு என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுவாய்' என சொல்லி மறைந்தாள். தேவி காட்சியளித்த கோலத்திலேயே சிலை வடித்து வடக்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர். பிற்காலத்தில் இக்காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை கட்டப்பட்டதால் பழஞ்சிறை எனப் பெயர் வந்தது. இங்கு அருள்புரியும் அம்பிகை பழஞ்சிறை தேவி எனப் பெயர் பெற்றாள். நினைத்தது நிறைவேற தேவிக்கு புடவை, செவ்வரளிப்பூக்கள் சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர். கொடுங்கல்லுார் தேவியின் அம்சமாக பழஞ்சிறைதேவி கருதப்படுகிறாள். கோயில் கட்டிய முனிவர் யோகீஸ்வரரின் சிலை அம்மனின் முன்பு உள்ளது. இவரை வழிபட்டு திருநீறு பூச குழந்தைகளுக்கு ஏற்படும் 'பாலாரிஷ்டம்' என்னும் தோஷம் அகலும்.
இங்கு மாசிமாத மிருகசீரிட நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும். 41 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் அப்போது 'தோற்றப்பாட்டு' என்னும் மலையாள கீதத்தை இசையுடன் பாடுவர். தேவி அவதரித்த வைபவம், அருள்புரியும் விதம் குறித்து இதில் வர்ணிக்கப்படும். இதைக் கேட்டால் கிரக தோஷம், முன்வினைப்பாவம், தடைகள் தீரும்.
மாசித்திருவிழாவின் ஆறாம் நாள் இரவில் நடக்கும் அத்தாழ பூஜையின் போது பெண் குழந்தைகளை தேவி போல வேடமிட்டு பூஜை செய்வர். இதனால் அவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். இந்நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்காக மாங்கல்ய பூஜை நடத்துவர். அதன்பின் நள்ளிரவில் நடக்கும் 'ஸ்ரீபூதபலி' என்ற பூஜையில் பூதகணங்களுக்கு பலியிடும் நிகழ்ச்சி நடக்கும். தேவியின் சிலம்பு, திரிசூலம், வாள், பட்டுவஸ்திரத்தை அணிந்தபடி பூஜாரி இதில் பங்கேற்பார்.
நவக்கிரகம், ரக்த சாமுண்டி, பிரம்ம ராட்சஸ், மாடன், தம்புரான் சன்னதிகள் இங்குள்ளன. 17 யானைகள், ஆறு சிங்க சிலைகள் கருவறையை சுமக்கின்றன. கருவறையின் மீது மும்மூர்த்திகள், மூன்று தேவியர், கங்கையுடன் கூடிய சிவன் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வெளியிலுள்ள சர்ப்பக்காவு என்னும் வனப்பகுதியில் ஆறடி உயர நாகராஜர் சன்னதி உள்ளது. அபிஷேகம் செய்து இவரை வழிபட்டால் கண், தோல் நோய்கள் நீங்கும். ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் பங்கேற்கின்றனர்.

எப்படி செல்வது: கிழக்குக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவளம் ரோட்டில் 5 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, மாசித்திருவிழா
நேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94474 00300; 0471- 246 1037, 245 5204
அருகிலுள்ள தலம்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயில்
நேரம்: அதிகாலை 4:15 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0471 -- 245 0233

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X