கேளுங்க சொல்கிறோம்
அக்டோபர் 04,2022,16:06  IST

கே.கார்த்திகா, திருப்பரங்குன்றம் மதுரை.
*வாகன விபத்தை தடுக்க யாரை வழிபட வேண்டும்?
பயணத்தின் போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லி துர்கையை வழிபடுங்கள்.
ரோகான் அசேஷான் அபஹம்ஸி
துஷ்டான் ருஷ்டாது காமான் ஸகலான் அபீஷ்டான்
த்வாம் ஆஸ்ரிதானாம் நவிபத்
நரானாம் த்வாமாஸ்ரிதா ஆஸ்ரயதாம் ப்ரயாந்தி

ஆர்.சங்கரராமன், கல்யாண்புரி, புதுடில்லி
*ஹிந்து மதத்தை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
ஹிந்துக்கள் ஒற்றுமையுணர்வுடன் இருக்க வேண்டும். ஹிந்து மதம் நமது தாய் மதம் என்ற உணர்வு எல்லோருக்கும் வேண்டும். மற்றபடி ஹிந்து மதம் வலுவாகத்தான் உள்ளது. அதை யாரும் பலவீனப்படுத்த முடியாது.

ஆர்.ராஜி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.
*வீட்டுத் தோட்டத்தில் அரச, வேப்ப மரங்கள் ஒன்றாக வளர்வது நல்லதா?
அரச, வேப்ப மரங்களை நட்டு வைத்து வளர்ப்பதை விட, தானாக வளர்வது சிறப்பு. இவற்றை வழிபட்டால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.

கே.வர்ஷா, பெங்களூரு.
*மழுப்பொறுத்த விநாயகர் யார்? அவர் எங்கிருக்கிறார்?
மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய விநாயகர் என்பது இதன் பொருள். மழு என்பது கோடரி வடிவில் இருக்கும். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் கோயில் குளக்கரையில் இவருக்கு சன்னதி உள்ளது.

பி. முத்துக்கிருஷ்ணன், ராதாபுரம், திருநெல்வேலி.
*பள்ளியறையை கண்ணாடியால் அலங்கரிப்பது ஏன்?
அன்றாட நிகழ்வுகளாக வாழ்வில் நாம் எதைச் செய்கிறோமோ அதை சுவாமிக்கும் செய்து அழகு பார்ப்பதே கண்ணாடி அலங்காரத்தின் நோக்கம்.

வி.கலா, அவினாசி, திருப்பூர்.
*முன்னோர் வழிபாடு செய்யாததால் சிரமப்படுகிறேன். பரிகாரம் சொல்லுங்கள்.
முன்னோர் வழிபாடு அவசியம் என்பதை உணர்ந்தாலே சிரமம் பாதியாகி விடும். தர்ப்பணம், திதி கொடுத்தால் பிதுர்தோஷம் நீங்கும். முன்னோர் ஆசியால் குடும்பம் சுபிட்சமாகும்.

எல்.ராஜி, வில்லிவாக்கம், சென்னை.
*கும்பாபிஷேகத்தன்று கருடன் வரவில்லையே. இது தவறா...
இயற்கையை விட்டு விலகியதன் விளைவுதான் இது. இதைக் குறையாக கருத வேண்டாம். கோயில்களைச் சுற்றி குடியிருப்பு, கடைவீதிகள் இப்போது பெருகி விட்டன. நீர்நிலைகளையும் நாம் பராமரிப்பதில்லை. போதாக்குறைக்கு ஒலிமாசு ஒருபுறம். விழாக்காலத்தில் சத்தத்தை ஏற்படுத்தும் வெடிகள் மறுபுறம். அப்புறம் கருடன் எப்படி வரும்?

கே.கணேஷ், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி.
*பெற்றோர் வழிதவறினால் பிள்ளைகளின் கதி என்னாகும்?
பெற்றோரைப் போல பிள்ளைகளும் வழிதவற வேண்டும் என்பதில்லை. மனக் கட்டுப்பாட்டுடன் நெறி தவறாமல் பிள்ளைகள் வாழ்ந்து காட்டினால் பெற்றோர் திருந்த மாட்டார்களா... என்ன?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X