""கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்'' (சங்.138:8) என்ற வசனத்தை வாசித்திருப்பீர்கள். ஆம்..அவரால் எதையும் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சியைப் பாருங்கள்.
ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாக மிகவும் தாமதமானது. அவளுக்கு திருமணம் நடத்த முயற்சி எடுக்க ஒருவரும் இல்லை. இதனால், அவள் அழுதபடியே ஒரு போதகரிடம் முறையிட்டு அழுதாள். போதகர் அவளிடம், மேற்கண்ட வசனத்தை வாசித்துக் காட்டியதுடன், ""எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தினமும் நூறு முறை சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்து,'' என்றார்.
மூன்று மாதங்கள் கழிந்தன. அவள் திருமண அழைப்பிதழுடன் போதகரைக் காண வந்தாள். ""போதகரே! எனக்காக கர்த்தர் உண்மையாகவே யாவையும் செய்து முடித்தார்,'' என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
ஆதாம் ஏவாளை தோட்டத்தில் வைக்கும் முன்னர், கர்த்தர் அவர்களுக்காக சூரியன், சந்திரன், காற்று, உணவு. தண்ணீர்
பறவைகள், மிருகங்கள், கனிவகைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்திருந்தார். அதையெல்லாம் கண்டபோது, ஆதாமின் உள்ளம் எவ்வளவு நன்றியோடு பொங்கி, ""எனக்காக என் தேவன் எத்தனை மேன்மைகளைச் செய்து முடித்திருக்கிறார்,'' என்று ஸ்தோத்தரித்திருக்கும்.
அதுபோலவே, கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் சிலுவையில் செய்து, ""முடிந்தது'' என்றார். பாவமன்னிப்புண்டாக்கினார்.நித்திய ஜீவனை ஏற்படுத்தினார். அது மட்டுமல்ல, நமக்காக பரலோகத்திலும் அவர் யாவையும் செய்து முடித்திருக்கிறார்.