மன்னராக கிருஷ்ணர் அரசாட்சி புரியும் தலம் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகை. மோட்ச தலங்களில் ஒன்றான இதை தரிசித்தால் நிம்மதியும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும். துவாரகா நாத்ஜி என இங்குள்ள கிருஷ்ணரை அழைக்கின்றனர்.
மதுராவை ஆட்சி செய்தவன் கொடுங்கோலன் கம்சன். கிருஷ்ணரின் தாய்மாமனும் கூட. கம்சனைக் கொன்ற கிருஷ்ணர் மதுராவின் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இதற்கு பழி தீர்க்க கம்சனின் மாமனாரான ஜராசந்தன் மதுரா மீது 18 முறை படையெடுத்தான். இதனால் யாதவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் துவாரகையில் அழகிய நகரை நிர்மாணித்து அவர்களை குடியமர்த்தினார் கிருஷ்ணர். இதன் பின்னணியில் 'துவாரகா நாத்ஜி மந்திர் என்னும் பெயரில் கிருஷ்ணர் கோயில் இங்கு கட்டப்பட்டது.
கருவறையில் துவாரகாதீஷ் (கிருஷ்ணர்) தலையில் கொண்டையுடன் மேற்கு நோக்கி நிற்கிறார். இக்கோயிலுக்கு 'ஜெகத் மந்திர்' என்றும் பெயருண்டு. துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயாரின் திருநாமம் கல்யாண நாச்சியார், (மகாலட்சுமி) ருக்மணி இங்குள்ள புனித தீர்த்தம் கோமதி நதி. அஷ்ட மகிஷிகள் என்னும் கிருஷ்ணரின் எட்டு மனைவியர், அண்ணன் பலராமர், துர்வாசருக்கு சன்னதிகள் உள்ளன.
தினமும் இங்கு சுவாமிக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருப்பர். ஒருநாளைக்கு 17 முறை உணவு கொடுப்பதோடு மணிக்கொரு முறை ஆடை மாற்றுகின்றனர். காலையில் கிருஷ்ணரை எழுப்பும் திருப்பள்ளியெழுச்சியை 'உடாபன்' என்பர். சுவாமிக்கு தங்க பல்குச்சியால் பல் துலக்கி லட்டு, ஜிலேபி தருவர். 7:00 மணிக்குள் தீர்த்தம் படைக்கப்படும். காலை 8:00 மணிக்கு சக்கரை, பால், தயிர் பரிமாறுவர்.
பிறகு அப்பம், அக்காரம் பாலில் கலந்த சிற்றுண்டி தருவர். அதன் பிறகு பழ வகைகளும், செரிமானத்திற்கு லேகியமும் தருவர். இதன்பின் சற்று நேரம் உறங்கச் செல்வார். உணவு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு 'போக்' என்று பெயர்.
துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறிய ருக்மணி சில காலம் தனித்து வாழ்ந்ததால் ருக்மணிக்கு ஊருக்கு வெளியே கோயில் உள்ளது.
கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் இருந்த துவாரகை தற்போது இல்லை. அந்நிய படையெடுப்பில் முற்றிலும் அழிந்து விட்டது. 15ம் நுாற்றாண்டில் குஜராத்தை ஆண்ட சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. சோமநாதபுரம் சோமநாத் கோயில் கட்டட பாணியில் உள்ளது. கோபுர உயரம் 51.8 மீட்டர். 72 துாண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது.
எப்படி செல்வது: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 453 கி.மீ.,
விசேஷ நாள்: கோகுலாஷ்டமி தீபாவளி, ேஹாலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்னும் உறியடி உத்ஸவம்
நேரம்: காலை 6:30 - 12:45 மணி; மாலை 5:00 - இரவு 9:45 மணி
தொடர்புக்கு: 02892 - 235 109, 234 080
அருகிலுள்ள தலம்: நாகேஸ்வரர் ஜோதிர்லிங்க மந்திர் 15 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 02892 - 234 080