தினமும் வீட்டில் காலை, மாலையில் நீங்கள் கேட்கும் கந்த சஷ்டி கவசம் (தேவராய சுவாமிகள் பாடியது) உருவான இடம் எது தெரியுமா.... ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை முருகன் கோயில் தான். இங்குள்ள முருகனை செவ்வாய்கிழமையில் தரிசனம் செய்தால் வருமானத்திற்கு குறைவிருக்காது. முன்னொரு காலத்தில் நாகங்களின் அரசரான நாகராஜனின் பிடியில் இருந்த மலை மகாமேரு. இந்த மலையை விடுவிக்க முயன்றார் தேவர்களில் ஒருவரான வாயு. இருவருக்கும் ஏற்பட்ட போட்டியில் மகாமேருவின் மலையின் தலைப்பகுதி விழுந்த இடமே சென்னிமலை. இதற்கு சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்ற பெயர்களும் உண்டு மலையருகே வாழ்ந்த பண்ணையாரின் பசுமாடு ஒன்று தானாகச் சென்று ஓரிடத்தில் தினந்தோறும் பால் சொரிந்தது. அவ்விடத்தினை தோண்டிப்பார்க்க முருகனுடைய கற்சிலை கிடைத்தது. அதனை அம்மலையின் மீது பிரதிஷ்டை செய்தார். அதுவே பின்னாளில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோயிலாக உருவானது.
மலைக்கோயிலில் மூலவர் தண்டபாணி. மூலவருக்கு பின்புறம் வள்ளி, தெய்வானை சன்னதி தனியாக உள்ளது. அதற்கு பின்புறம் பின்நாக்கு சித்தர் சன்னதி உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் மக்களின் வறுமை நீங்க பாடிய தலம் இது.
12.௨.1984 அன்று இக்கோயிலில் மாடு பூட்டிய வண்டி 1320 படிகள் வழியே மலைமேல் சென்ற அதிசயம் நடைபெற்றது. இம்மலையை சுற்றி 24 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. மூலவருக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை. மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை.
தொழில் மேன்மை, திருமணம் கைகூடவும், குழந்தை வரம் வேண்டியும், கல்வி மேன்மையடையவும், நோய், கடன் தொல்லைகள் அகலவும் வழிபாடு செய்கின்றனர். சுபநிகழ்ச்சிகளுக்கு பூப்ேபாட்டு கேட்கும் வழக்கம் உள்ளது.
எப்படி செல்வது: ஈரோட்டிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் 28 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி விசாகம் ஆடி கார்த்திகை, ஐப்பசி கந்தசஷ்டி தைபூசம். மாசிமகம்
நேரம்: காலை 6:00 - இரவு 8:15 மணி
தொடர்புக்கு: 04294 - 250 223, 292 263.
அருகிலுள்ள தலம்: சிவன்மலை 23 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 -மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 72992 48583