நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி முருகப்பெருமானை கந்தசஷ்டி நன்னாளில் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். துன்பம் நெருங்காதபடி உங்களை எட்டாத உயரம் எல்லாம் எட்டச் செய்து அழகு பார்ப்பான் அந்த முருகப்பெருமான்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொருள்வைத்தசேரி என்றொரு கிராமம். அங்கு 'சரவணபவ' என்ற சிற்பி வாழ்ந்தார். எப்போதும் 'சரவணபவ' மந்திரம் சொல்பவர் என்பதால் அதுவே பெயரானது. முருக பக்தரான அவர் முருகன் சிலை ஒன்றை வடித்தார். அது என்றென்றும் அவர் பெயர் சொல்லும் என்பது புரிந்தது. ஊரார் அனைவரும் அதை பார்த்துச் சென்றனர். இந்த விஷயம் மன்னர் பராந்தகச்சோழனை எட்டியது. கம்பீரமாக மயில் மீதிருந்த முருகன் சிலையைப் பார்த்த மன்னர் ஆச்சரியப்பட்டார். சிற்பிக்கும் பெருமை தாங்கவில்லை.
இந்நிலையில் அரசு அதிகாரிகள் காதில் முணுமுணுத்து விட்டு கிளம்பினார் மன்னர். உடனே பரபரத்த அதிகாரிகள் மக்களை அப்புறப்படுத்தினர். சிற்பிக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கை, கால்கள் கட்டப்பட்டன. சட்டென
அவரது கை கட்டை விரல்கள் வெட்டப்பட்டன. கதறி அழுத சிற்பிக்கு அப்போது தான் புரிந்தது... இந்தச் சிலை போல வேறொன்றை எதிர்காலத்தில் யாருக்கும் செய்து தரக் கூடாது என மன்னர் நினைத்தார் என்பது.
சிற்பி அங்கிருந்து பக்கத்து கிராமத்திற்கு இடம் பெயர்ந்தார். குடில் அமைத்து தங்கினார். காயம் ஆறிய பின், மனதில் மெல்ல உற்சாகம் பிறந்தது. யாருக்கும் தெரியாமல் முருகன் சிலை வடிக்க விரும்பினார். கட்டை விரல் இல்லாவிட்டாலும் விடாமுயற்சியால் ஒரு வழியாகச் செய்து முடித்தார். பழையதை விட புதியது சிறப்பாக அமைந்தது. இதைக் கேள்விப்பட்ட குறுநில மன்னர் முத்தரசன் நேரில் வந்தார். சிலையின் அழகைக் கண்டு வியந்தார். அப்போது சட்டென சிலையாக இருந்த மயில் பறக்கவே மன்னர், 'எட்டிப்பிடி எட்டிப்பிடி' என சப்தமிட்டார். பணியாட்களும் மயிலைப் பிடித்து அதன் கால்களைக் கட்டினர். மீண்டும் மயில் சிலையாக மாறி நின்றது. அந்த இடத்தில் முருகன் கோயில் எழுப்பப்பட்டது. அந்த 'எட்டிப்பிடி'யே தற்போது 'எட்டுக்குடி' என அழைக்கப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி என்னும் பெயரில் முருகன் இருக்கிறார்.
சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு உதவிய நவவீரர்கள் உள்ளனர். பெருமாள், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், பைரவர், ஜூரதேவர் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் 20 கி.மீ.,
விசேஷ நாள்: சித்ரா பவுர்ணமி பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை
நேரம்: அதிகாலை 4:30 - 12:30 மணி; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 04366 - 245 426
அருகிலுள்ள தலம்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் 22 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99442 23644, 98652 79137