எதிரி பிரச்னைகளால் சிரமப்படுபவர்கள் கஷ்டம் தீர கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடும்பு கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லலாம். இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவில் பங்கேற்றால் நிம்மதிக்கு குறைவிருக்காது.
விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நெசவாளர்கள் மீது கூடுதல் வரி சுமத்தப்பட்டது. இதை ஏற்காத காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் சிலர் பாலக்காட்டைச் சுற்றியுள்ள பகுதியில் குடியேறினர். அவர்களின் குலதெய்வமான முருகனுக்கு பதினான்காம் நுாற்றாண்டில் கோயில் எழுப்பினர். இங்கு கோபுரம், விமானம், சன்னதிகள் அனைத்தும் தமிழக பாணியில் கட்டப்பட்டுள்ளன. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் நின்ற கோலத்தில் இருக்கிறார். ஒரே கல்லில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.
சிவன், உமாதேவி, பரசுராமர், கிருஷ்ணர், சாஸ்தா, ஒன்பது படைத்தளபதிகள், வீரபாகு, பைரவரின் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. தலவிருட்சமாக செண்பக மரம் உள்ளது.
இங்கு வேண்டிய பிறகு திருமணம் அமையப் பெற்றவர்கள் கோயிலிலேயே திருமணத்தை நடத்துகின்றனர். இதனால் சுவாமிக்கு 'கல்யாண சுப்பிரமணிய சுவாமி' எனப் பெயர் ஏற்பட்டது.
தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய நாட்களில் அபிேஷகம், அலங்காரம் நடக்கும். கந்தசஷ்டி விழாவில் குழந்தைப்பேறுக்காக முருகனை வேண்டி பக்தர்கள் விரதமிருப்பர். இந்த விழாவில் முருகனின் படைத்தளபதிகளைப் போல வேடமிட்ட ஒன்பது பக்தர்கள் சூரசம்ஹாரத்தில் பங்கேற்பர். பழமையான இக்கோயிலில் தமிழக முறைப்படி பூஜைகள் நடக்கின்றன. தைமாத பரணியன்று தொடங்கி தைப்பூசம் நட்சத்திரம் வரை பத்து நாள் திருவிழா நடக்கும்.
பிரிந்த தம்பதியர் சேர இங்கு வேண்டிக் கொள்கின்றனர். கோயிலுக்கு அருகில் ஓடும் சோக நாசினி நதியில் நீராட மனதிலுள்ள சோகங்கள் பறந்தோடும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகாமக திருவிழா நடக்கிறது.
எப்படி செல்வது: பாலக்காட்டில் இருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்: கந்தசஷ்டி, தைப்பூசம் பங்குனி உத்திரம்
நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 0491 - 257 4425, 99953 31430
அருகிலுள்ள தலம்: பள்ளசேனா மீன்குளத்தி
பகவதியம்மன் கோயில் 18 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 - 11:30 மணி; மாலை 5.30 - 7:30 மணி