குலதெய்வக் கோயிலில் முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இது இன்று நேற்றல்ல... துவாபர யுகத்திலும் நடந்திருக்கிறது. பகவான் கண்ணனுக்கு முடிக்காணிக்கை செலுத்திய அம்பேமா கோயில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம் அம்பாஜியில் உள்ளது. இங்கு ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே முடிக்காணிக்கை செலுத்த முடியும் என்பது இன்னும் ஆச்சரியமான செய்தி.
மகிஷாசுரன் என்னும் அரக்கன் எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக் கூடாது என அக்னிதேவனிடம் வரம் பெற்றான். அதன்பின் ஆணவத்துடன் தேவர்களை எல்லாம் துன்புறுத்தினான். வரத்தின் பலத்தால் அரக்கனை கொல்ல முடியாத தேவர்கள் பகவதியம்மனைச் சரணடைந்தனர். போருக்குச் சென்ற பகவதி அசுரனைக் கொன்றபின் இங்கு அம்பாஜி அம்பேமா என்னும் பெயரில் அருள்புரியத் தொடங்கினாள்.
மற்றொரு வரலாற்றின்படி ராமர் வழிபட்ட கோயில் இது. சீதையைத் தேடி வந்த ராமரும் லட்சுமணரும் காட்டில் சிருங்கி முனிவரைச் சந்தித்தனர். அம்பாஜியை வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என முனிவர் ஆலோசனை தெரிவித்தார். ராமரும் வழிபட்டு அஜய் என்னும் அஸ்திரத்தை அம்மனிடம் பெற்று சீதையை மீட்டார். ராமர் பூஜித்த அம்மனே இங்கு குடிகொண்டிருக்கிறார்.
கருவறையில் சிங்க வாகனத்தின் மீது அம்மன் அமர்ந்திருப்பது போல இருந்தாலும், உண்மையில் அம்மன் சிலை இங்கு கிடையாது. 'ஸ்ரீ யந்த்ரம்' என்னும் தகட்டினை மார்பிள் பிளேட்டில் பொருத்தி நகைகளால் அலங்கரித்துள்ளனர். இந்த யந்திரத்தை தரிசித்தால் செல்வம் பெருகும். ஆமை ஒன்றின் மீது யந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில் 51 மந்திர அட்சரங்கள் உள்ளன. யந்திரத்தின் அருகில் செல்ல விரும்புவோரின் கண்களை துணியால் கட்டி விடுவர். அதன் சக்தியைத் தாங்கும் சக்தி நமக்கு இல்லை என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கருவறை சிறியது என்றாலும் மண்டபம், பிரகாரம் எல்லாம் மார்பிள் கற்களால் பிரம்மாண்டமாக உள்ளது. தலவிருட்சம் அரச மரம். 'அம்பே மா' அல்லது 'சச்சார் சவுக்வாலி' என அம்மனை அழைக்கின்றனர். கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிள் கல்லால் ஆன கலசம் உள்ளது. 3 ஆயிரம் கிலோ தங்கத்தால் கலசம் மூடப்பட்டுள்ளது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் தான் பகவான் கண்ணனின் மூன்று வயதில் முடிக்காணிக்கை செலுத்தினர். கோகுலத்தில் வாழ்ந்த நந்தகோபனும், யசோதையும் இந்த வைபவத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். விநாயகர், மனைவியான சித்தி, புத்தி, மகன்களான சுப், லாப் (சுபம், லாபம்), பேரன்களான குஷல், சாம் ஆகியோருடன் தனி சன்னதியில் இருக்கிறார். வடமாநில பாணியில் செந்துாரம் பூசியபடி காட்சியளிக்கிறார்.
எப்படி செல்வது: ஆமதாபாத்தில் இருந்து 172 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, விஜயதசமி
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 02749 - 262 136, 264 536
அருகிலுள்ள தலம்: சோம்நாத் சோமேஸ்வர் மந்திர் 8 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 9:30 மணி
தொடர்புக்கு: 094282 14823