சி.சசிரேகா, எழும்பூர், சென்னை
*சுபஹோரையில் ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி கிடைக்குமா?
ஒரு செயலைத் தொடங்க ஹோரை, லக்னம், கவுரி பஞ்சாங்கம் என பல விஷயங்கள் உள்ளன. ஏதாவது ஒன்றைப் பின்பற்றினால் வெற்றி கிடைக்கும்.
என்.பவானி, குஞ்சன்விளை, கன்னியாகுமரி.
*மழை பெய்ய என்ன மந்திரம் சொல்லலாம்?
''ஜ்ரும்பகாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி|
தன்னோ வருண: ப்ரசோதயாத்|.
என்னும் மந்திரத்தை ஜபியுங்கள். சுந்தரர் பாடிய 'வையகமுற்று மாமழை' என்னும் தேவாரத்தைப் பாடுங்கள்.
கே.மகேஸ்வரி, பெங்களூரு. *சுவாமிக்கு சாத்திய நைவேத்யம், பூக்களை எப்போது எடுக்கலாம்?
பூஜை முடிந்ததும் நைவேத்யத்தை எடுக்கலாம். காலையில் சாத்திய பூக்களை மாலையிலும், மாலையில் சாத்திய பூக்களை மறுநாள் காலையிலும் எடுங்கள்.
வி.அகிலா, இடுவம்பாளையம், திருப்பூர்.
*காஞ்சி மஹாபெரியவருக்கு வீட்டில் பூஜை செய்யலாமா?
பூஜை செய்யலாம். அவரை குருநாதராக ஏற்று வழிபடுவோர் அவரது உபதேசங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஜே.விசாலம், காட்டுமன்னார்கோவில், கடலுார்.
*இறுதி காலம் நிம்மதியாக அமைய என்ன செய்ய வேண்டும்?
தினமும் கோயிலுக்கு செல்லுங்கள். அருளாளர்களின் புத்தகங்களை படியுங்கள். ஆசை, பாசம், பந்தத்தை குறையுங்கள். பேச்சு அளவாக இருக்கட்டும். இதை எப்போதும் பின்பற்றுங்கள்.
ஜி.கண்மணி, வடுகபட்டி, தேனி
*தீர்த்த யாத்திரைக்கு கணவன் மனைவி சேர்ந்தே செல்ல வேண்டுமா?
உண்மை தான். புண்ணிய தீர்த்தத்தில் நீராடும் போது மனைவியின் கையைப் பிடித்து நீராடுங்கள். முடியாவிட்டால் மகனின் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.
என்.பரமகுரு, தமிழர் என்கிலேவ், டில்லி.
*உடல், உறுப்புகளை தானம் அளிக்க ஆன்மிகம் அனுமதிக்கிறதா?
உடல் தீயில் கருகும் முன் உறுப்பு தானமளிப்பது நல்லது. 'பரோபகாராய இதம் சரீரம்' என்றொரு ஸ்லோகம் கூட உண்டு.
வி.பொன்மணி, தச்சநல்லுார், திருநெல்வேலி.
*குருவருள், திருவருள் பெற என்ன செய்ய வேண்டும்?
குருவருள் இருந்தால் திருவருள் தானாகவே வரும். குருநாதரை வழிபட கடவுளின் அருளும் சேரும்.
எஸ்.குமார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
*கையில் கருப்பு தவிர்த்து மற்ற நிறங்களில் கயிறு கட்டலாமா?
குலதெய்வம், குடும்ப வழக்கத்தைப் பொறுத்து கயிற்றின் நிறம் இருக்கும் என்பதால் குடும்ப பெரியவர்களைக் கேட்டு முடிவு செய்யுங்கள்.
பி.ஜெயமுருகன், கடலாடி, ராமநாதபுரம்
*வளர்ப்பு நாய் ஊளையிடுவது, பூனை அழுவது ஆகாதாமே?
வளர்ப்பவரை அதிக நேரம் பிரிந்திருந்தாலோ அல்லது உணவு கேட்டோ இப்படி செய்யும். அது தவறு அல்ல. ஆனால் வேறு காரணம் இருந்தால் வீட்டிற்கு ஆகாது.