கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு, சென்னை.
*விருப்பம் நிறைவேற எந்த சுவாமியின் மந்திரம் சொல்லலாம்?
ஓம் சக்தி விநாயகநம என்னும் மந்திரத்தை சொன்னால் விருப்பம் நிறைவேறும்.
கி.பாலு, குற்றாலம், தென்காசி.
*நற்செயல் செய்தும் நிம்மதியாக வாழ முடியவில்லையே...
நிம்மதி என்பது ஒருவரின் மனதைப் பொறுத்த விஷயம். புத்தியைக் கட்டுப்படுத்தி மனதை முதலில் ஒருமுகப்படுத்துங்கள். மனஉறுதி இருந்தால் கலக்கத்திற்கு வழியில்லை. தியானம், யோகாசனம், மூச்சுப்பயிற்சிகளில் தினமும் ஈடுபடுவது நிம்மதிக்கான வழி.
கே.லட்சுமணசாமி, பப்பன்கிலேவ், டில்லி.
*பிளாஸ்டிக் பொம்மைக் கடவுள்களை பூஜிக்கலாமா?
பூஜிக்கக் கூடாது. கல், மண், பளிங்கு, உலோகச் சிலைகளை மட்டுமே பூஜிக்க வேண்டும்.
ஆர்.ஜெயா, நெய்வேலி, கடலுார்.
*எங்கள் குலதெய்வத்தின் கோயில் கும்பாபிஷேத்திற்கு போகவில்லை. பரிகாரம் உண்டா?
48ம் நாளன்று நடக்கும் மண்டலாபிேஷகத்தில் கலந்து கொள்ளுங்கள். கும்பாபிஷேகத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
கி.வித்யாராணி, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*சிவாலயம், விஷ்ணுவாலயம் என்று சொல்வது சரியா?
சரியானதே. 'ஆ' என்றால் ஆன்மாக்கள் அதாவது உயிர்கள். 'லயம்' என்றால் ஒன்றுபடுதல். உயிர்கள் மனம் ஒன்றி கடவுளை வழிபட ஒன்றுசேரும் இடமே ஆலயம். ஆலயத்திற்கு சென்றால் புத்துணர்ச்சி வரும்.
பி.சரஸ்வதி, ராஜபாளையம், விருதுநகர்.
*கர்ப்பிணிகள் இருவர் ஒரே வீட்டில் வசிக்கலாமா?
சகோதரிகள் அல்லது ஒரே குடும்பத்தின் மருமகள்கள் மட்டும் ஒரே வீட்டில் வசிக்கலாம்.
எம்.கவிமலர், ராமமூர்த்தி நகர், பெங்களூரு.
*கால பைரவரை வீட்டில் வழிபடலாமா?
வழிபடலாம். இதனால் கிரகதோஷம், செய்வினை, திருஷ்டி நீங்கும். கவசம் போல் பைரவரின் திருநீறு உங்களைக் காக்கும்.
வி.வாசுதேவன், பீடம்பள்ளி, கோயம்புத்துார்.
*அரைஞாண் கயிறு கட்டுவது கட்டாயமா...
ஆம். வயிற்றுக்கு மேல், கீழ் என உடம்பை இரண்டாக பிரிக்கும் இடம் அரை. உடம்பிலுள்ள நரம்பெல்லாம் சங்கமிக்கும் இந்த இடத்தில் தான் உயிர் நிலைகொண்டுள்ளது. உயிருக்கு காப்பாகவும், உடலில் ரத்த ஓட்டம் சீர்படவும் அரை ஞாண் கயிறு கட்டுகிறோம்.
வே.தேவஜோதி, தபால்தந்தி நகர், மதுரை.
*பித்ருக்கள் நல்லவர்களா கெட்டவர்களா?
தாய், தந்தை, பாட்டி, தாத்தா என இறந்த முன்னோர்களே பித்ருக்கள். அவர்களைப் போய் நல்லவரா, கெட்டவரா எனக் கேட்கலாமா...