புதுக்கோட்டை மாவட்டம் துார்வாசபுரத்திலுள்ள காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றினால் சனி, ராகு, கேதுவால் ஏற்படும் கிரக பாதிப்பு குறையும். நினைத்தது நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மண்ணால் ஆன நாய் சிலைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ராமர் அயோத்தியில் இருந்து வனவாசம் வந்த போது ரிஷிகளுடன் தங்கியிருந்தார். அதில் ஒருவரான துர்வாச மகரிஷி நெல்லி வனமான இப்பகுதியில் சுயம்புலிங்கத்தை வழிபட்டு வந்தார். அந்த லிங்கம் காலப்போக்கில் மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் மேய்ச்சல் பகுதியான இங்கு பசு ஒன்று குறிப்பிட்ட இடத்தில் தினமும் பால் சுரந்தது. அதைக் தோண்டிய போது சிவலிங்கம் புதைந்து கிடந்தது. இதையறிந்த பாண்டிய மன்னர் சிவனுக்கு கோயில் கட்டினார். இதை தெரிவிக்கும் விதமாக கருவறையில் மீன் சின்னம் உள்ளது. கி.பி.1032ல் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. பாதாளத்தில் இருந்து கிடைத்ததால் சுவாமி 'பாதாளேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 'சுந்தரேஸ்வரர்' என்றும் பெயருண்டு.
துர்வாசரின் நிஜப்பெயர் துார்வாசர் என்பதாகும். 'துாரத்தில் வரும் போதே மணம் கமழ்பவர்' என்பது பொருள். அவர் தவம் செய்த பூமி என்பதால் ஊருக்கு 'துார்வாசபுரம்' என்று பெயர். கருவறையின் முன் மண்டபத்தில் சுரங்கம் இருப்பதாகவும், அதில் அவர் இன்றும் தவம் செய்வதாக கூறுகின்றனர். பத்மாசனமிட்டு தியான நிலையில் துர்வாசர் இங்கிருக்கிறார். மாணவர்கள் வியாழன் அன்று இவரை வழிபட கல்வி வளர்ச்சி உண்டாகும்
தருமபுரம் மடத்தைச் சேர்ந்த சடையப்பத் தம்பிரான், வைத்தியலிங்கத் தம்பிரான்களால் இங்கு காலபைரவர் சன்னதி கட்டப்பட்டது. நின்ற கோலத்தில் கையில் கபாலம், பாம்பு, திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி, நாய் வாகனத்துடன் தெற்கு நோக்கி இருக்கிறார். தேய்பிறை அஷ்டமியன்று விசேஷ யாகம் நடக்கிறது. கிரக தோஷம், கடன்பிரச்னை, குழப்பம் தீர பக்தர்கள் பூசணிக்காயில் தீபமேற்றுகின்றனர். சிவன் கோயிலாக இருந்தாலும் 'பைரவர் கோயில்' என்றே மக்கள் அழைக்கின்றனர்.
பாதம்பிரியாள் அம்மன் தெற்கு நோக்கியிருக்கிறாள். வலது கையில் குவளை மலர் ஏந்தியபடி நிற்கும் அம்மனின் தலை நாணத்தால் சற்று சாய்ந்தபடி உள்ளது. செவ்வாய், வெள்ளி நெய் தீபமேற்றி கன்னியர் வழிபட திருமணத்தடை நீங்கும். பவுர்ணமி விரதமிருந்து அம்மனை தரிசித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்துடன் வாழும் பேறு கிடைக்கும்.
எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து 4 கி.மீ.,
விசேஷ நாள்: சம்பக சஷ்டி ஆனித்திருமஞ்சனம், திரியம்பக அஷ்டமி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94427 62219
அருகிலுள்ள தலம்: கண்ணனுார் பாலசுப்பிரமணியர் கோயில் 2 கி.மீ.,
நேரம்: காலை 10:30 - 11:30 மணி
தொடர்புக்கு: 94427 62219