அன்று முதல் இன்று வரை எல்லாத் துறைகளிலும் சிறப்புற்றுத் திகழும் நகரம் காஞ்சிபுரம். அந்தக் காஞ்சி என்னும் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாக இருப்பது 'கோயில்களின் நகரம்' என்ற பெருமை. அந்தக்கல்லில் ஒரு சிறு கூறுதான் பெரிய காஞ்சிபுரத்திலுள்ள நகரீஸ்வரர் கோயில். ஆம்! கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் பல்லவர்கள். அவர்களில் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அது. குளுமையான கோயில். இனிமையான தென்றல் காற்று சுற்றிவரும் பிரகாரம். வெளிச்சமான சன்னதிகள் என பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கிறது.
இந்த நகரத்துக்கே ஈஸ்வரர் என்பதால் மூலவருக்கு நகரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை தரிசித்ததும் எந்தப் பிரச்னையும் நிரந்தரம் இல்லை என்று நம் மனதில் தோன்றும். நிமிடங்கள் நகர்வதுபோல் வருத்தங்களும் நகர்ந்துவிடும்.
பின் பிரகாரத்தை சுற்றி வந்தால் நமது கண்ணில் சிறிய சன்னதி தென்படும். அங்கு அற்புதமாக செய்யப்பட்டிருக்கும் பதினெட்டு படிகள், படியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல், பூக்கள், பொன்னாக ஜொலிக்கும் குத்து விளக்குகளை பார்த்ததும் நமக்கு புல்லரிப்பு ஏற்படும். ஆம்! அங்கு வீற்றிருக்கும் தர்ம சாஸ்தா என்னும் பாலகனின் புன்சிரிப்பு பரவசத்தை தரும். குட்டிப் பையனாக, அழகனாக இருக்கும் அவர் பூரண, புஷ்கலையுடன் காட்சி தருகிறார். சனிக்கிழமை தோறும் அவருக்கு அலங்காரமும், பக்தர்களுக்கு அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் சோறு சாப்பிடத் தேவையானது பசி மட்டுமல்ல. மன நிம்மதி. இந்த மனநிம்மதி என்னும் அமிர்தம் இங்கு கிடைக்கும். பிறகு என்ன... ஒரு நடை போய் வாருங்கள். உங்களது கண்ணிற்கு புதிய பாதை தென்படும். எல்லாம் நல்லதாகவே நடக்கும். தல விருட்சம் வன்னி மரம். கால பைரவர், வள்ளலார், ஷீரடி சாய்பாபா சன்னதி உள்ளன.
எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி, கார்த்திகை சோமவாரம், அமாவாசை, மகா சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 82202 72392; 99521 12093
அருகிலுள்ள தலம்: காமாட்சி அம்மன் கோயில் 1 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0442 - 722 2609