காவல் தெய்வமான கால பைரவருக்கு மத்தியபிரதேசம் உஜ்ஜைனி நகரில் கோயில் உள்ளது. ஷிப்ரா நதிக்கரையில் அமைந்த இக்கோயிலில் சுவாமியின் தலை மட்டும் பெரியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திக்கு தெரியாமல் தவிக்கும் பிரச்னையாக இருந்தாலும் இவரை நம்பினால் கரை சேர்வது உறுதி.
அந்தகன் என்னும் அசுரன் அக்னியின் நடுவே நின்று தவம் செய்து சிவனிடம் வரங்கள் பல பெற்றான். அதனால் ஆணவம் கொண்ட அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். கைலாயம் சென்ற தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரத்தை தீமைக்கு பயன்படுத்திய அசுரனை அழிக்க அவர் முடிவெடுத்தார். தன் அம்சமாக காலபைரவரை உருவாக்கி அசுரனுடன் போர் புரிய அனுப்பினார். பைரவரும் அவனைக் கொன்று வெற்றி வாகை சூடினார். மகிழ்ச்சியடைந்த தேவர்கள் கால பைரவருக்கு நன்றி தெரிவித்தனர். இதன் அடிப்படையில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரான பத்ராசென் என்பவர் காலபைரவர் கோயிலை கட்டினார்.
மால்வா கட்டடக்கலை பாணியில் கோட்டை அமைப்பில் கோயில் உள்ளது. கருவறையில் சுவாமியின் உருண்டை வடிவத் தலையில் கண்கள், மூக்கு, வாய் மட்டுமே உள்ளன. காபாலிகா, அகோரி வழிபாட்டு முறைப்படி தாந்திரீக பூஜை நடக்கிறது. பூஜை பொருட்களில் பூமாலை, கருப்புக்கயிறு, ஊதுபத்தி, சூடத்துடன் மதுபானமும் இடம் பெறுகிறது. கோயில் சுவரில் விநாயகர், விஷ்ணு, தேவியின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. பைரவர் சன்னதியின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், எதிரில் நந்தியும் உள்ளன. கருவறைக்கு வலது புறத்தில் பாதாள பைரவி சன்னதி உள்ளது. தரை மட்டத்திற்குக் கீழே இரண்டடி சதுர வடிவ நுழைவு வாயிலில் குனிந்து தவழ்ந்து சென்றே அம்மனை தரிசிக்க வேண்டும். கருவறையின் எதிரில் கூம்பு வடிவத்தில் பெரிய தீபத்துாண் உள்ளது. நீண்ட ஜடாமுடியும், உடல் எங்கும் திருநீறு பூசிய சாதுக்கள் கோயிலைச் சுற்றி தங்கியுள்ளனர். இங்கு தலவிருட்சம் ஆலமரம்.
தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் எதிரி தொல்லை மறையும். நீண்ட கால நோயும் விலகும். இழந்த பணம், பொருள் மீண்டும் கிடைக்கும். வாகனப் பயணம் சுகமாக அமைய முந்திரி மாலை அணிவிக்கின்றனர். காலபைரவரின் வாகனமான நாய் சிலை வாசலில் உள்ளது. விருப்பம் நிறைவேற சனிக்கிழமைகளில் இங்குள்ள நாய்களுக்கு பிஸ்கட் அளிக்கின்றனர். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியன்று இங்கு காலபைரவர் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எப்படி செல்வது: மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனி பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,
விசேஷ நாள்: கால பைரவர் அவதார தினம், மகாசிவராத்திரி
நேரம் காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 0704 - 886 0578
அருகிலுள்ள தலம்: உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயில் 6 கி.மீ.,
நேரம்: அதிகாலை 4:00 - இரவு 11:00 மணி
தொடர்புக்கு: 0734 - 255 0563