நடனக்கலையில் சிறந்து விளங்கவும், தாயின் ஆசியையும் பெறவும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரத்தினசபைக்கு வாங்க. இக்கோயில் நடராஜர் நடனமிடும் பஞ்ச சபைகளில் ஒன்று.
ஆலமரங்கள் நிறைந்த இத்தலத்தில் வாழ்ந்த சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் தேவர்களுக்கு துன்பம் தந்தனர். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் போக்க அருகிலிருந்த காளியை அனுப்பி வைத்தாள் பார்வதிதேவி. அசுரர்களை அழித்து உக்கிரமானாள் காளி. அவளை சாந்தப்படுத்த சிவபெருமானிடம் வேண்டினார் கார்க்கோடக முனிவர்.
ஆலங்காட்டிற்கு வந்த அவரிடம் காளி, ''என்னுடன் நடனமாடி ஜெயிக்க வேண்டும்'' என்றாள். அதற்கு அவரும் சம்மதிக்க, போட்டியில் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழ வைத்து, அதை இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் அணிந்து கொண்டார். இதனை ஊர்த்துவ நடனம் என்பர். இதை ஆட இயலாது என தோல்வியை ஒப்புக்கொண்டாள் காளி. எம்மைத்தவிர உனக்கு சமமானவர் வேறு யாருமில்லை எனவே இத்தலத்தில் முதலில் உனக்கே வழிபாடு என வரம் அளித்தார் சிவபெருமான். இங்கு காளி தனியாக அருள் செய்கிறாள். இத்தல சுவாமியின் திருநாமம் வடாரண்யேஸ்வரர். அம்பாளின் திருநாமம் வண்டார் குழலி. இவ்வுலகை காக்கும் சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பெற்ற காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்.
அம்மைக்கு நடனக்காட்சி காண்பித்ததும் இங்கு தான். இத்தலம் தேவாரமூவர், அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்று. இக்கோயிலின் தலவிருட்சம் ஆலமரம். இத்தலத்தில் கிடைத்த செப்பேடுகள் சோழர்கால சரித்திரத்தை விளக்கும் சான்றுகளாகும்.
எப்படி செல்வது: அரக்கோணத்தில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: ஆனி திருமஞ்சனம் மார்கழி திருவாதிரை, பங்குனி சுவாதி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99522 30906; 044 - 2787 2074
அருகிலுள்ள தலம்: திருவிற்கோலம் சிவன் கோயில் 18 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94432 53325