வெற்றிபெற வேண்டுமா வாருங்கள் கேரளாவிலுள்ள திருபாதபுரம் என்னும் தலத்திற்கு... இங்குள்ள சிவபெருமானை தரிசித்தால் எதிலும் வெற்றி தான்.
பாரதப் போரில் வெற்றி பெற சிவபெருமானிடம் 'பாசுபத அஸ்திரம்' பெறுவது முக்கியம் என அர்ச்சுனனுக்கு சொன்னார் கிருஷ்ணர். அதன்படி தவம் செய்த அர்ச்சுனனுக்கு அருள் செய்ய சிவபெருமான் வேடுவர் வேடத்தில் வந்தார். பன்றி உருவத்தில் அசுரன் ஒருவனை இடையூறு செய்ய அனுப்பினான் துரியோதனன்.
வேடர் வடிவ சிவபெருமானும் அர்ச்சுனனும் ஒரே சமயத்தில் அம்பு எய்து பன்றியை கொன்றனர். வந்திருப்பது சிவபெருமான் என தெரியாமல் யார் பன்றியை முதலில் கொன்றது என்ற விவாதம் வளர்ந்து சண்டையாக மாறியது. அதில் அர்ச்சுனனை தனது காலால் உதைத்தார் சிவபெருமான். அவன் போய் விழுந்த இடமே திருப்பாதபுரம் என பெயர் பெற்றது.
இதை நினைவூட்டும் விதமான இக்கோயில் சிவபெருமானுடைய பாதங்கள் உள்ளன.
ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயிலில் வில்வங்க முனிவர் என்பவரே சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். சுவாமியின் திருநாமம் மகாதேவர். சண்டையில் சுவாமியின் மீது அடிபட்ட போது பார்வதிதேவி அதை உணர்ந்து வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினாள். அதுவே தீர்த்தமாக மாறியது. வற்றாத இத்தீர்த்தத்தில் கண் தொடர்பான நோயுடையவர்களும் நீராடி நலம் பெறுகின்றனர். முக்கிய நாள்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுபவர்களுக்கு நினைத்தது நடக்கிறது. எதிரியின் தொல்லை இருக்காது.
விநாயகர், கிருஷ்ணர், சாஸ்தாவிற்கு தனிச்சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: திருவனந்தபுரம் கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 22 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ் வருடப்பிறப்பு, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி
நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0471 - 244 3555
அருகிலுள்ள தலம்: மிலிட்டரி கணபதி கோயில் 17 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 10:45 மணி; மாலை 5:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 0471 - 246 1929