பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவர் விஷ்ணு. இவர் பூலோகத்தில் வாழ்பவர்களுக்கு காட்சி தர விரும்பி, பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கிறார். அவற்றுள் பல தலங்களில் சயனக் கோலத்திலும், நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இதுவே இவர் சயனக்கோலத்தில் தண்ணீரில் மிதந்தபடி காட்சி தந்தால் எப்படி இருக்கும்? அந்த ஆவல் உங்களுக்கு இருந்தால் நேபாளத்திற்கு வாருங்கள். அங்கு காத்மாண்டு பள்ளத்தாக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் ஜலநாராயணராக அருள்புரிகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒன்று அவரது காலில் இடித்தது. அதை மீறி மீண்டும் முயற்சிக்கவே ரத்தம் பீறிட்டது. பின் பூமியில் இருந்து ஒரு சிலையை எடுத்தார். அவர்தான் நம் ஜலநாராயணர். இவருக்கு கோயில் எழுப்பினார் விஷ்ணு குப்த மன்னர். இக்கோயில் 1400 ஆண்டு பழமையானது.
ஒருசமயம் சிலையில் இருந்து சிறு பகுதி உடைந்தது. அதனை ஆய்வு செய்த போது அது 'சிலிகா' அதிகம் கொண்ட கல் என தெரிந்தது. அதாவது எரிமலை கக்கி வெளிவரும் கற்கள் பெரியதாக இருக்கும். ஆனால் எடை இருக்காது. அதனால்தான் இங்கு நாராயணர் மிதந்து கொண்டிருக்கிறார். இங்கு இவரை 'புதநீல்கந்தா' என அழைக்கின்றனர். இதற்கு நீல நிறத்தொண்டை எனப்பொருள்.
13 மீட்டர் நீளம் கொண்ட குளத்தில், ஆதிசேஷன் மீது சயனம் கொண்டிருக்கிறார் நாராயணர். இவர் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, மாணிக்கங்களை தாங்கியுள்ளார். புஷ்பங்களை அவரது காலடியில் வைத்து பிரசாதமாக தருகின்றனர்.
விஷ்ணு துாக்கத்திற்கு செல்லுதல், எழுப்புதல் என ஹரி சயனி, ஹரி போதினி என்ற பெயரில் திருவிழா கொண்டாடுகின்றனர்.
எப்படி செல்வது: காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 12 கி.மீ.,
விசேஷ நாள்: வைகுண்ட ஏகாதசி, ஹரி சயனி ஹரி போதினி திருவிழா
நேரம்: அதிகாலை 5:00 மணி - மாலை 6:00 மணி
அருகிலுள்ள தலம்: பசுபதிநாதர் கோயில் 10 கி.மீ.,
நேரம் அதிகாலை 5:30 மணி - இரவு 10:00 மணி
தொடர்புக்கு: 977 - 1447 1828