சனீஸ்வரர் கோயில்கள்
ஜனவரி 19,2023,09:23  IST

திருநள்ளாறு
சேதி நாட்டு இளவரசியான தமயந்தியை வானுலக தேவர்கள் மணம்புரிய விரும்பினர். அதற்காக சுயம்வரத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் நிடத நாட்டு மன்னரான நளனைக் காதலித்ததால் அவருக்கே மாலையிட்டாள். கோபம் கொண்ட தேவர்கள் நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரரின் உதவியை நாடினர். அவரோ நளனின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக இதனை பயன்படுத்திக் கொண்டார். ஏழரை வருடம் சனிதோஷத்தால் நளன் அவதிப்பட்டார். ஒரு சமயம் ஆடையை இழக்கும் நிலை வந்தது. ஆனாலும் வருந்தவில்லை. சிவத்தலமான திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசித்த போது நளனை விட்டு சனிதோஷம் நீங்கியது. இங்குள்ள அனுக்ரஹ சனீஸ்வரரை தரிசித்தால் நல்வாழ்வு உண்டாகும்.
எப்படி செல்வது : காரைக்காலில் இருந்து 5 கி.மீ.,
மயிலாடுதுறையில் இருந்து 33 கி.மீ.,
தொடர்புக்கு: 04368 - 236 530

குச்சனுார்
மன்னரான தினகரன் குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் மேற்கொண்டார். அப்போது அசரீரியாக, '' உன்னைத் தேடி வரும் சிறுவனை மகனாக வளர்த்து வா'' என ஒலித்தது. அதன்படியே அவனுக்கு 'சந்திரவதனன்' எனப் பெயரிட்டார். பின்னர் மன்னருக்கு பிறந்த குழந்தைக்கு, 'சதாகன்' எனப் பெயரிட்டார். ஆனால் வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கே முடிசூட்டினார். அந்த சமயத்தில் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. தந்தை மீதுள்ள அன்பால் சந்திரவதனன், இரும்பால் சனீஸ்வரர் சிலை செய்து, ''என் தந்தைக்கு ஏற்பட்ட துன்பத்தை நான் ஏற்கிறேன்'' என வேண்டினான். அதை ஏற்று ஏழரை நாழிகை (3மணி நேரம்) மட்டுமே பிடித்து விட்டு தினகரனை விட்டு சனீஸ்வரர் விலகினார். குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பியதால் இத்தலம் 'குச்சனுார்' எனப்பட்டது. சிவலிங்க வடிவில் சனீஸ்வரர் இங்குள்ளார்.
எப்படி செல்வது: தேனியிலிருந்து 30 கி.மீ.,
தொடர்புக்கு: 97895 27068, 04554 - 247 285

சிங்கனாப்பூர்
மகாராஷ்டிரா மாநிலம் சிங்கனாப்பூரில் சனீஸ்வரர் கோயில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு கனமழையால் இங்குள்ள பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அதில் வந்த கல் ஒன்று இங்கு ஒதுங்கியது. அதில் ரத்தம் பீறிடுவதை மக்கள் கண்டனர். அன்றிரவு கிராமத்தலைவரின் கனவில் தோன்றிய சனீஸ்வரர், 'கல் வடிவில் வந்துள்ள என்னை இங்கு பிரதிஷ்டை செய்' என உத்தரவிட்டார். ஐந்தடி உயர கல்லே மூலவராக இங்குள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கறுப்பு உளுந்து படைப்பது சிறப்பு.
எப்படி செல்வது: ஷீரடியில் இருந்து 60 கி.மீ.,
பூனாவில் இருந்து 160 கி.மீ.,
மும்பையில் இருந்து 265 கி.மீ.,

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X