அனைத்து தோஷங்களும் பறந்தோட...
ஜனவரி 19,2023,11:34  IST

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் நவக்கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நவக்கிரகங்களால் பலன்களும், தோஷங்களும் ஏற்படும். இதற்கு பரிகாரமாக பலரும் குறிப்பிட்ட தலங்களை சென்று வழிபடுவர். இதுவே அனைத்து தோஷங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுதுான் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோயில். இங்கு விசேஷம் என்னவென்றால் பன்னிரண்டு ராசிக்காரர்களும் தங்களின் கிரகங்களுக்கு உரிய வழிபாடு, பரிகாரங்களை செய்யலாம்.
காலவ முனிவர் என்பவர் தனக்குத் தொழுநோய் வரப் போவதை ஞான திருஷ்டியால் அறிந்தார். இதனால் மனம் வருந்திய அவருக்கு மற்ற முனிவர்கள் ஆறுதல் கூறினர். அதோடு அவர்கள், 'எல்லோருக்கும் அவரவர் வினைப்பயனை ஊட்டுவது நவக்கிரகங்கள். அவற்றை வழிபட்டு தொழுநோயிலிருந்து தப்பிக்கலாம்' என்று உபாயமும் சொன்னார்கள். அதன்படி அவரும் நவக்கிரக நாயகர்களை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார். இதனால் நவக்கிரகங்களும், 'தொழுநோய் தாக்காது' என்று வரத்தை அளித்தனர். இதை அறிந்த பிரம்மா கோபத்துடன், 'வினைப்பயனை கொடுப்பது மட்டுமே உங்களது வேலை. அதை மீறி நடந்து கொண்டதால் காலவ முனிவருக்கு பீடிக்க இருந்த தொழுநோய், உங்களை பீடித்திருக்கட்டும்' என்று சாபமிட்டார்.
அதோடு சாப விமோசனமாக பூலோகத்தில் அர்க்கவனம் சென்று, அங்கு இருக்கும் ஈசனை வழிபடுங்கள் என்றார். அதன்படி தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அர்க்கவனத்தை தேடி அலைந்தனர். அப்போது அகத்திய முனிவரின் வழிகாட்டுதலால், பிராண நாதரை நோக்கி தவமிருந்தனர். இதனால் மகிழ்ந்த ஈசன் நோயை தீர்த்து, அவர்கள் தவமிருந்த இடத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க வரமும் கொடுத்தார்.
கோயிலின் ராஜகோபுரத்தை கடந்தவுடன் உஷாதேவி, சாயாதேவியுடன், இரு கைகளிலும் தாமரை மலர் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் சூரியபகவான். உச்சிப்பொழுதில் தகதகவென மின்னும் சூரியனைப் போல் இருக்கிறார் அவர். இவரை வணங்கியதும், இவருக்கு எதிரே இருக்கும் குரு பகவானை வழிபடலாம். பின்பு மற்ற கிரகங்களையும் வணங்கலாம். இங்கு பூரண சுபரான குரு பகவானின் நேரடிப் பார்வை, சூரிய பகவானின் மீது படுகிறது.
அந்தப் பார்வை அப்படியே மற்ற கிரகங்களுக்கும் கிடைக்கிறது.
இதனால் இங்கு ஒருமுறை வந்து வணங்கினாலே, அனைத்து தோஷங்களும் பறந்தோடும். வெள்ளெருக்கு தல விருட்சமாக உள்ளது. திருமங்கலக்குடி சென்று பிராணநாதேஸ்வரை வணங்கிய பிறகுதான், இங்கு வந்து சூரியபகவானை வழிபட வேண்டும்.

எப்படி செல்வது: கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ் மாதம் முதல் ஞாயிறு தமிழ் மாதப்பிறப்பு, ரத சப்தமி சனி, குரு, ராகு - கேது பெயர்ச்சி
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0435 - 247 2349
அருகிலுள்ள தலம்: திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில் 1 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0435 - 247 0480

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X