திருவள்ளூர் மாவட்டம் சோழாவரம் அருகே உள்ள ஞாயிறு என்னும் தலத்திற்கு வாங்க. அரசு வேலை அனுகூலமாகுமுங்க.
சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியில் முகாம் இட்டிருந்த போது குளத்தில் பூத்திருந்த அதிசய தாமரை பூக்களை கண்டார். அதை சிவபூஜைக்கு பயன்படுத்தலாம் என நினைத்து கத்தியால் பறிக்க முயன்றார். கத்தி குளத்திற்குள் இருந்த சிவ லிங்கத்தின் மீது பட்டது. அதனால் குளத்துதண்ணீர் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது. சிவக்குற்றம் செய்த மன்னரது கண்களும் ஒளியிழந்தன. தவறை உணர்ந்த அவருக்கு சிவபெருமான் பேரொளியாக காட்சி தந்தார். அதோடு ஒரு கோயிலையும் உருவாக்கும் படி வரமும் வழங்கினார்.
பூக்கள் வழியாக சிவபெருமான் காட்சி தந்ததால் புஷ்பரதேஸ்வரர் என பெயரிட்டார் மன்னர். இன்றும் இந்தச் சிவலிங்கத்தின் மேல் கத்தி பட்ட வடு இருப்பதை பக்தர்கள் தரிசிக்கலாம். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரே சூரியன் சன்னதி உள்ளதால் இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. இங்கே வந்து சிவதரிசனம் செய்தாலே கண் தொடர்புடைய நோய்கள் தீரும். ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்ய பெற்ற சொர்ணாம்பிகை சன்னதி சுவாமிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருமணப்பேறு நல்கும் சன்னதியாக திகழ்கிறது.
சென்னையில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களில் சூரியனுக்குரிய தலம். இவரும் இத்தல சிவபெருமானை வழிபாடு செய்து நோய் நீங்கப்பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவியான சங்கிலி நாச்சியார் பிறந்த தலம். சகுந்தலையின் தந்தையான கண்வ மகரிஷி முக்தி பெற்ற இக்கோயிலை சோழ,பாண்டிய,விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், பைரவர், நடராஜர், சிவகாமிஅம்பாள், சங்கிலி நாச்சியாருக்கும் சன்னதிகள் உள்ளன.
தீர்த்தம் சூரிய தீர்த்தம். தலமரம் நாகலிங்க மரம். ஞாயிற்றுக்கிழமை தோறும் 11 முறை ஆதித்ய ஹிருதயம் சொல்லி புஷ்பரதேஸ்வரரை வழிபாடு செய்ய அரசு வேலை கிடைக்கும் என்கின்றனர்.
எப்படி செல்வது: செங்குன்றத்தில் இருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்: ஞாயிற்றுக்கிழமை தமிழ்மாதப்பிறப்பு, சிவராத்திரி
நேரம்: காலை 7:00 -- 11:00 மணி; மாலை 4:00 -- 7:00 மணி
தொடர்புக்கு: 99522 24822, 99620 34729
அருகிலுள்ள தலம் வடதிருமுல்லைவாயில் மாசிலாமணியீசர் கோயில் 23 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 044 - 2637 6151