பா.காவ்யாஸ்ரீ, கணபதிபாளையம், கோயம்புத்துார்.
*ராமாயணம், மகாபாரத கதை கேட்டால்...
மனிதன் தர்மத்தை மீறக் கூடாது என்பதை உணர்த்தவே ராமர், கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார் மகாவிஷ்ணு. தெய்வீகமான இக்கதைகளை கேட்டால் தர்ம சிந்தனை ஏற்படும். புண்ணியம் சேரும்.
ச.நாராயணன், சேரன்மகாதேவி, திருநெல்வேலி.
*ஆண்கள் சட்டையின்றி தரிசிக்க வேண்டும் என கோயில்களில் நடைமுறைப்படுத்தலாமே...
இதை கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தவும், பக்தர்கள் கடைபிடிக்கவும் அக்கறை காட்ட வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட கோயில்களிலும், திருச்செந்துார், இலங்கையிலும் இதை பின்பற்றுகின்றனர்.
வி.லதா, திருநாவலுார், கள்ளக்குறிச்சி.
*ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருப்பின், ஜோதிடம் மூலம் கண்டறிய முடியுமா?
சரியான நேரத்தை தெரிவிப்பது உங்களின் கடமை. நேரம் தவறாக இருந்தால் பலனும் அப்படியே இருக்கும்.
எம்.முத்தையா, திருநகர், மதுரை.
*பவுர்ணமியன்று மலைக்கோயிலை வலம் வருவது ஏன்?
இயற்கையாகவே தெய்வீகம் நிறைந்தது மலைக்கோயில். பவுர்ணமியன்று நிலவு முழுமையாக பிரகாசிக்கும். அப்போது வலம் வந்தால் மனம், உடல் புத்துணர்வு பெறும். மூலிகை காற்றால் நோய்கள் தீரும். வேண்டுதல் நிறைவேறும்.
எஸ்.விஷால், திருத்தணி, திருவள்ளூர்.
*மொட்டை அடித்தால் கண்ணாடியில் முகம் பார்க்க கூடாதாமே...
இப்படி கட்டுப்பாடு எதுவும் கிடையாது.
எம்.அனிதா, பெங்களூரு.
*கோயில் தீர்த்தம் மணம், சுவையாக இருக்கிறதே எப்படி
ஏலக்காய், பச்சைக் கற்பூரம், துளசி இருப்பதால் மணமாகவும், சுவாமிக்கு அபிஷேகம் செய்ததால் சுவை, தெய்வீகம் கொண்டதாக இருப்பது இயல்பே!
சி.அர்ச்சனா, கல்யாண்புரி, டில்லி.
*காணிக்கையை மற்றவர் மூலம் கோயிலுக்கு கொடுத்து அனுப்பலாமா?
உடல் நலமின்மை, நேரில் போக முடியாத சூழல் இருந்தால் மட்டுமே மற்றவர் மூலம் கொடுத்தனுப்பலாம்.
எஸ்.கனகராஜ், சந்தையடி, கன்னியாகுமரி.
*மார்கழியில் கோலத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியல் பொழுது என்பதால் வழிபாட்டுக்குரிய மாதமாக உள்ளது. இதனால் அதிகாலையில் பெண்கள் கோலமிட்டு, விளக்கேற்றியும், ஆண்கள் பஜனை பாடலையும் பாடுவர். இதனால் வீடும், நாடும் நலம் பெறும்.