வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பது போல தைமாதப் பிறப்பு அன்று கயிலாய வாசல் திறக்கும் ஒரு கோயில் உள்ளது. ஆமாம் வாருங்கள் அங்கு சென்று தரிசிப்போம்.
கர்நாடகா மைசூருவில் அருகே உள்ள சிறப்பான கோயில்களில் ஒன்று தலக்காடு. கயிலாய பதவி வேண்டி சிவபெருமானை வழிபட்டார் சோமதத்த முனிவர். அவரது கனவில் சிவபெருமான் ''கஜாரண்யத்திற்கு சென்று வழிபடுக பதவி கிடைக்கும்''என சொல்லி மறைந்தார். யானையாக மாறி அங்கு தவத்தில் ஈடுபட்டார். ஒரு நாள் தலா, காடன் என்னும் வேடர்கள் வேட்டைக்கு இக்காட்டிற்கு வந்தனர்.
யானை வடிவில் இருந்த முனிவருக்கு அவர்கள் குறி வைக்க அது ஒரு புற்றில் விழுந்தது. அதிலிருந்து ரத்தம் பீறிட ''இங்கு லிங்க வடிவில் உள்ளேன். அம்பினால் ஏற்பட்ட காயம் தீர மூலிகை மருந்திடுங்கள்'' என அசரீரியாக சிவபெருமான் சொன்னார்.
அவர்களும் அவ்வாறே செய்ய, யானை வடிவ முனிவருக்கும் காட்சி கொடுத்து வேடர்கள் பெயராலே இப்பகுதி தலக்காடு என்னும் பெயருடன் விளங்கட்டும் என அருள்பாலித்தார். சுவாமியின் திருநாமம் வைத்தியநாதர். சுயம்பு லிங்கம் என்பதால் அபிஷேகம் கிடையாது. சுவாமி கவசம் அணிந்து நாகாபரணத்தில் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதால் நோய்கள் நீங்கும். இக்கோயிலில் உள்ள 10 அடி உயரமுடைய துவாரபாலகர்கள் பிரமிப்பை தருகின்றனர்.
மனோன்மணி என்னும் பெயரில் அம்பாள், கைகளில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். குதிரை மேல் எழுந்தருளியுள்ள விநாயகர், பிரகாரங்களில் இருக்கும் பஞ்சலிங்கங்களை தரிசிப்பது சிறப்பு. இக்கோயிலுக்கு சோழர்கள், ஹோய்சால அரசர், விஜய நகர அரசர்கள் திருப்பணி செய்துள்ளனர். இக்கோயிலில் காணப்படும் சிற்ப வேலைகள் ரசிக்கத்தக்கன. புற்றுமண்ணை பிரசாதமாக தருகின்றனர். தீர்த்தம் கல்யாணி தீர்த்தம். பத்ரகாளி, மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் உள்ளன.
எப்படி செல்வது
டி.நரசிபுராவில் இருந்து 29 கி.மீ,
மைசூருவில் இருந்து 45 கி.மீ,
பெங்களூருவில் இருந்து 130 கி.மீ.,
விசஷே நாள் : தமிழ்மாத பிறப்பு, வைகாசி பவுர்ணமி, கார்த்திகை சோமவாரம் மாசி சிவராத்திரி
நேரம்: காலை 6:30 - 1:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 98861 24419; 08227 - 273 413
அருகிலுள்ள தலம்: மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் 53 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0821 - 259 0127