நேபாள சிற்பக்கோயில்
ஜனவரி 30,2023,12:46  IST

எங்கும் வியாபித்து, நீக்கமற நிறைந்திருப்பவர் நாராயணர். அவர் பல திருவிளையாடல்களை பல்வேறு இடங்களில் நிகழ்த்தியுள்ளார். அவையெல்லாம் பெரும் புண்ணியத் தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நேபாளத்தில் உள்ள சங்கு நாராயணர் கோயில். பக்தபூர் மாவட்டத்தில் சங்கு என்ற கிராமத்தில் அருள்புரிவதால் இவருக்கு இப்பெயர் வந்துவிட்டது. இவரை 'கருட நாராயணர்' எனவும் அழைக்கின்றனர். யுனெஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது.
முற்காலத்தில் பிராமணர் ஒருவரிடம் பசுவை வாங்கி, அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தார் இங்கு இருந்த நபர். நாளடைவில் எதிர்பார்த்ததை விட குறைவான பால் கறக்க ஆரம்பித்தது பசு. இதனால் இவர் பிராமணரிடம் புகார் கொடுத்தார். அவரும் இதற்கு ஒரு திட்டத்தை தீட்டினார். அதன்படி ஒருநாள் இருவரும் பசுவை பின்தொடர்ந்தபோது, அது மரத்தின் அருகில் நின்றது. அந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் பாலை குடித்தான். அவனை பிடிக்க முயன்றபோது, அந்த மரத்தின் உள்ளேயே சென்று மறைந்துவிட்டான். கோபம் அடைந்த பிராமணர் மரத்தை வெட்ட, அங்கு அதிசயம் நிகழ்ந்தது. ஆம். அதில் இருந்து நாராயணர் தோன்றி, பிராமணரிடம் பேச ஆரம்பித்தார்.
'ஒருமுறை இந்த பகுதிக்கு வேட்டையாட வந்தேன். அப்போது குறி தவறி அம்பு உங்களது தந்தையை தாக்கியது. அவர் இறந்து போனதால், பிரம்மஹத்தி தோஷம் என்னை பிடித்தது. அன்று முதல் மரமாக இருந்து வந்த நான், உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்' என்றார். பின் அவர்களது விருப்பப்படி நாராயணர் இங்கேயே தங்கிவிட்டார். கி.மு.325ம் ஆண்டிலேயே இங்கு சிறிய அளவில் கோயில் இருந்துள்ளது. 1708 ல் பாஸ்கர மல்லர் என்ற மன்னர் கோயிலின் கதவு, ஜன்னல், கூரையில் தங்க முலாம் பூசி செப்புத்தகடுகளால் கோயிலை அலங்கரித்தார். கருங்கற்கள் மூலம் இரண்டடுக்குகளாக, பண்டைய நேபாள மரபுப்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. மரமும், கல்லும் கூடிய வேலைப்பாடுகளுடன் யாளி, சிங்கம், யானை என பல சிற்பங்கள் உள்ளன.
இங்கு நான்கு வாயில்கள் இருந்தாலும், மேற்கு வாயில்தான் முக்கியமானது. அதில் நாராயணரின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரையை அழகு சிற்பங்களாக காணலாம். கோயிலின் உள்ளே கருட வாகனத்தில் விஷ்ணு, உலகளந்த பெருமாள் என போற்றப்படும் வாமனர், மகாபலி சக்கரவர்த்தி என சிற்பக்களஞ்சியத்தையே பார்க்கலாம். இதைக் கடந்து சென்றால் நாராயணரை கண் குளிர தரிசிக்கலாம். ஆடும் கோலத்தில் நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்தி காட்சி தருகிறார். இவரைத் தவிர கிருஷ்ணர், சிவபெருமான், சின்னமஸ்தா தேவியை (தன் தலையைத் தானே கொய்து கையிலேந்தி, மறு கையில் வாள் ஏந்திக் காட்சி தருபவள்) காணலாம். ஆனால் இங்கு தினசரி வழிபாடு கிடையாது. ஏகாதசி, அஷ்டமி, நவமியின் போது கோயில் சார்பாகப் பூஜை நடக்கும். மற்ற சமயத்தில் தனிப்பட்டவர்களின் குடும்பச் சடங்குகள், பிறந்தநாட்களில் கட்டணம் பெற்று பூஜை செய்யப்படுகிறது.

எப்படி செல்வது: காத்மாண்டு நகரில் இருந்து 22 கி.மீ.,
விசஷே நாள்: அஷ்டமி, நவமி, ஏகாதசி
நேரம்: காலை 7:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 977 - 1425 6909
அருகிலுள்ள தலம்: காத்மாண்டு குகியேஸ்வரி கோயில் 26 கி.மீ.,
நேரம்: காலை 7:30 - இரவு 10:00 மணி
தொடர்புக்கு: 977 - 1447 1828

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X