ஜன.28 - ரத சப்தமி
மகாபாரதப்போரின் பத்தாம் நாள். பாண்டவரில் ஒருவரான அர்ஜூனன் அம்பு விடுகிறார். யாரை நோக்கி? தன்னை வளர்த்த பீஷ்மர் மீது. அம்புகளால் துளைக்கப்பட்ட அவர் அம்பு படுக்கையில் சாய்ந்தார். அந்நேரம் தட்சிணாயனம். பொதுவாக தட்சிணாயனத்தில் இறந்தால் மோட்சம் கிடைப்பது சிரமம். எனவே அவர் உத்தராயணத்தில் (தை - ஆனி) உயிரை விட விரும்பினார். விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என்ற வரத்தை ஏற்கனவே பெற்றிருந்தார் பீஷ்மர். தை பிறந்தும் உயிர் பிரியவில்லை. உடல், மன வேதனையில் தவித்தார்.
அப்போது அங்கு வந்த வியாசரிடம், ''நான் என்ன பாவம் செய்தேன். ஏன் இன்னும் உயிர் பிரியவில்லை'' என வருந்தினார்.
அதற்கு அவர், ''ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் செய்யும் தீமை மட்டும் பாவம் அல்ல. பிறர் செய்யும் அநீதிகளை தடுக்காமல் இருப்பதும் பாவமே. அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். அதைத்தான் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்'' என்றார்.
அப்போதுதான் பீஷ்மருக்கு உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாண்டவரின் மனைவி பாஞ்சாலியை அவமானப்படுத்தியபோது, யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று தெரிந்தும், அதை நாம் தடுக்காமல் இருந்துவிட்டோமே என்பதை உணர்ந்து, ''இதற்கு என்ன பிராயச்சித்தம்'' எனக் கேட்டார்.
''யார் தான் செய்தது பாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ, அப்போதே அந்தப் பாவம் அகன்றுவிடும். அவையில் பாஞ்சாலி கதறியபோது உனது அங்கங்கள் எல்லாம் சரியாக இருந்தும் நீ அநியாயத்தை தட்டிக்கேட்கவில்லை. எனவே இந்த அங்கங்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது. இனி இதை பொசுக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர் சூரியபகவான். அவருக்கு உகந்தது எருக்கன் இலை. இந்த இலைகளால் உன் அங்கங்களை அலங்கரித்தால், அவை உன்னை துாய்மையாக்கும்'' எனக் கூறி, தான் கொண்டு வந்திருந்த இலைகளால் அலங்கரித்தார் வியாசர்.
பின் மன அமைதியுடன் தியானத்தில் ஆழ்ந்த பீஷ்மர், மோட்சமும் அடைந்தார். இதை அறிந்த தர்மர், ''பிரம்மச்சாரியாக உயிர் நீத்த பீஷ்மருக்கு யார் பித்ருக் கடன் செய்வது'' என தவித்தார். அதற்கு வியாசர், ''தர்மரே வருந்தாதீர். ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரியும், துறவியும் பிதுர்லோகத்துக்கும் மேம்பட்ட நிலையை அடைகின்றனர். அவர்களுக்கு யாரும் பிதுர்க்கடன் செய்ய வேண்டியதில்லை. இருந்தாலும் உன் திருப்திக்காக இனி இந்த பாரத தேசமே பீஷ்மருக்கு நீர்க்கடன் அளிக்கும். அது மட்டுமல்ல. அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரத சப்தமியன்று, மக்கள் எருக்க இலையை தங்கள் உடலில் வைத்து குளிப்பார்கள். இதனால் பாவங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக்கொள்வார்கள்'' என்றார்.
எனவே ரத சப்தமியன்று விரதம் இருந்து, மேற்கூறியபடி நீராடினால் சுகமான வாழ்வு கிடைக்கும்.