நியாயமான வேண்டுதலை சீட்டில் எழுதி அம்மனுக்கு எதிரே இருக்கும் கம்பத்தில் கட்டினால் போதும். நல்லது நடக்குமுங்க ஆமாம் எங்குள்ளது அந்தக்கோயில்.
அது திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் தாங்க.
நந்தவனத்திலுள்ள பூக்களை தாயுமானவர்(சிவபெருமான்) பூஜைக்கு கொடுத்து வந்தார் சிவனடியாரான சாரமாமுனிவர். தரிசனத்திற்கு அங்கு வந்த மகாராணியார் பூக்கள் வாசனையாக உள்ளது. அதேமாதிரியான பூக்கள் தனக்கு வேண்டும் என மன்னரிடம் கூறினாள். இனி இதே பூக்களை ராணிக்கு தருமாறு முனிவருக்கு உத்தரவிட்டார்மன்னர். ''மன்னராக இருந்தாலும், சுவாமிக்கு பூஜை முடிந்த பின்னரே இந்தபூக்களை தர முடியும்'' என சொன்னார் முனிவர். அதை ஏற்காத மன்னர் பணியாளர் மூலம் பூக்களை பறித்து வர ஏற்பாடு செய்தார். நாளுக்கு நாள் பூக்களும் குறைந்தன. இச்செயலுக்காக தாயுமானவரிடம் முறையிட்டார் முனிவர். துன்பத்தை பொறுக்காத சுவாமி, உறையூர் அரண்மனை நோக்கி மண் மழையை பொழியச் செய்தார். இதனால் அனைவரும் பெரும் துயரம் அடைந்தனர். தவறை உணர்ந்தவர்கள் ஊர் எல்லை தெய்வமாகிய காளியிடம் முறையிட்டனர்.
மண் மழையை தாயுமானவரிடம் நிறுத்த ஆவன செய்தாள் காளி.
மன்னனும் நன்றியுடன் காளிக்கு கோயில் கட்ட முயற்சித்தான். அதற்கு அவளோ சூரியஒளியில் இருக்கவே என் விருப்பம் என உத்தரவு தந்தாள். அதனால் அவளுக்கு வெக்காளி என்ற பெயரே
நிலைத்துவிட்டது. வலது காலை மடித்து இடதுகாலை தொங்க விட்டு நான்கு கரங்களுடன் சிரித்த முகத்துடன் அக்னி நக கீரிடம் தரித்து அம்மன் அருள் செய்கிறாள். இவளை தரிசிப்போருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும். கோயிலில் விநாயகர், முருகர், காசி விஸ்வநாதர், காத்தவராயர், பெரியண்ணன், நாகர், மதுரைவீரன், பொங்குசனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து 6 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை திருவிழா, புரட்டாசி நவராத்திரி, தைப்பூசம்,
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0431 - 276 1869
அருகிலுள்ள தலம்: பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 97918 06457