சூரியன் பிதுர்காரகன் ஆவார். ஜாதகத்தில் இவரது நிலையை வைத்தே, ஒருவரது எதிர்காலம் சிறப்பாக அமையும். அதிலும் உடல்நலத்துடன் வாழ இவரது அருள் நிச்சயம் தேவை. அதற்கு துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திற்கு வாருங்கள். இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரை வணங்கினால் மோட்சம் கிட்டும். இத்தலம் நவதிருப்பதிகளில் சூரியனுக்குரியதாகவும், திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது.
சோமுகாசுரன் என்பவன் பிரம்மாவிடம் இருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்றது. இதனால் வருந்தியவர் பெருமாளை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். இவருக்கு காட்சி தந்ததோடு, அசுரனை அழித்து வேதங்களையும் மீட்டுக் கொடுத்தார். பின் பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, 'வைகுண்டநாதர்' என்ற பெயரையும் பெற்றார். சித்திரை, ஐப்பசி பவுர்ணமியன்று காலையில் இவரது பாதத்தில் சூரிய ஒளி விழும். பிரகாரத்தில் வைகுண்டவல்லித் தாயார் சன்னதி உள்ளது.
வைகுண்டநாதர் பக்தனாக இருந்தான் காலதுாஷகன் என்ற திருடன். இவன் தான் திருடியதில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை தர்மம் செய்யவும் செலவிட்டான். ஒருசமயம் அரண்மனையில் திருடச் சென்றபோது, அவனுடன் சென்றவர்கள் சிக்கினர். அவர்கள் காலதுாஷகனை காட்டிக் கொடுத்ததால், அரண்மனை சேவகர்கள் அவனை தேடினர். அப்போது இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்று, ''ஒருவனுக்கு பணப்பற்றாக்குறை இருந்தால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். அதனால்தான் திருடினேன். நான் குற்றவாளி இல்லை'' என்றார். இதைக்கேட்டவர் திடுக்கிட்டு, ''தாங்கள் யார்?'' எனக் கேட்டார். தன் சுயரூபத்தை காட்டினார் சுவாமி. இப்படி திருடன் வடிவில் வந்து நாட்டின் உண்மையை எடுத்துக் கூறியதால், இவருக்கு 'கள்ளபிரான்' என்ற பெயர் வந்தது.
மதுரை, திருநெல்வேலி பகுதிகளில், 'பால்பாண்டி' என்ற பெயரை குழந்தைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பல ஆண்டுக்கு முன் இக்கோயில் வழிபாடின்றி, சுவாமி சிலை ஆற்றங்கரையில் புதைந்திருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்த பாண்டிய மன்னன், இவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். அன்று முதல் தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தான். இன்றும் காலையில் இவருக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் 'பால்பாண்டி' என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது.
எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து 27 கி.மீ.,
விசேஷ நாள்: வைகுண்ட ஏகாதசி தமிழ் மாதப்பிறப்பு, ரத சப்தமி
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 04630 - 256 476
அருகிலுள்ள தலம்: வைத்தமாநிதி பெருமாள் கோயில் 8 கி.மீ.,
நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04639 - 273 607