விஷ்ணு சித்தர் என்பவர் பெருமாள்தான் உலகம் என வாழ்ந்தவர். பெருமாளின் அழகை பக்தர்கள் ரசிப்பதால், அவருக்கு கண்பட்டுவிடுமோ என வருந்தினார். உடனே அந்தக் கண்ணேறு அகல, பெருமாளை வாழ்த்திப்பாடினார். இப்படி பெருமாளையே வாழ்த்தியதால், அவர் 'பெரியாழ்வார்' என்று போற்றப்பட்டார். அவரது பாசுரத்தை நாமும் படித்தால், இப்பிறப்பில் மட்டுமின்றி பரமபதத்திலும் பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பாக்கியம் கிடைக்கும்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நுாறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா!
உன் சேவடி செவ்வி திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும்
சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்
அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
- திருப்பல்லாண்டு
உலகத்தவரின் பகைமையை வீழ்த்தி எங்களுக்கு வெற்றியைத் தரவல்ல, திண்மையான தோள்களை உடையவனே. மாணிக்க மணியின் நிறத்தைக் கொண்டவனே. பெருமானே! தாமரைபோலும் சிவந்த உன் திருவடிகளே எங்களுக்குக் காவலாக உள்ளது. உன் திருவடிகளே சரணம்!
அடியவர்களாகிய எங்களுக்கும், கடவுளாகிய உனக்கும் பிரிவு ஏற்படாதவாறு உன்னைப் பல்லாண்டு பாடுகிறோம். உன் திருமார்பின் வலப்பக்கத்தில் அழகோடு வீற்றிருக்கும் திருமகளுக்கும் பல்லாண்டு பாடுகிறோம். திருமேனியின் வலப்புறத்தில் ஒளிநிறைந்து விளங்குகின்றதும், பிரிவின்றி உறைவதுமாகிய திருச்சக்கரத்துக்கும் பல்லாண்டு பாடுகிறோம். பகைவர்களின் போர்க்களத்தே புகுந்து, முழங்குகின்ற 'பாஞ்சசன்னியம்' என்னும் அத்திருச்சங்கினுக்கும் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார் பெரியாழ்வார்.